Women's Day 2024 : மகளிர் தினம் கொண்டாடப்படுவது ஏன்? இதனால் யாருக்கு என்ன பயன்?

Women's Day 2024 : மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

“மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா..” என்ற கூற்றுக்கிணங்க, மகளிராய் பிறந்தவர்களை கொண்டாடும் நாளாக இருக்கிறது, மார்ச் 8ஆம் தேதி. ஒரு வாழ்க்கையை உருவாக்கும் சக்தியும், ஒரு வாழ்க்கையை புதிதாக மாற்றி அமைக்கும் சக்தியும் பெண் ஒருவளுக்கே உள்ளது என்பதை ஆண்மகன்கள் கூட உளமாற ஏற்றுக்கொள்வர். அந்த அளவிற்கு உயர்ந்த குலம், பெண்குலம். ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தில் கூட சிலர் முரண்பட்டு, “இல்லை, பெண் ஆணை விட சிறந்தவர்” என கூறுவர். ஆனால், பெண்கள் தினத்தை கொண்டாடும் போது, ஆண்கள் தினத்தில் ஆண்களை கண்டுகொள்ளாதது ஏன்? என்று கூடவே போட்டிக்கும் வருகின்றனர். சரி, மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கு பின்னால் என்ன வரலாறு இருக்கிறது? இதை கொண்டாடுவதால் யாருக்கு என்ன பயன்? இங்கு பார்க்கலாமா? 

1 /7

உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதியான நாளை மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல், சமூகத்தில் சாதனை புரிந்த பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. 

2 /7

மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கு பின்னால் பெரிய வரலாறு இருக்கிறது.1909ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் தேதியன்றுதான் முதல் மகளிர் தினம் அமெரிக்காவால் அனுசரிக்கப்பட்டது. பெண்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் வகையிலும், வாக்குரிமைக்காகவும் இந்த தினத்தை வழக்கறிஞர் க்ளாரா ஜெட்கின் என்பவர் அறிவித்தார். இதை ஒருமனதாக அனைவரும் ஏற்றுக்கொள்ள, 1910-1911ஆகிய ஆண்டுகளில் ஆஸ்த்ரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிச்சர்லாந்து ஆகிய நாடுகள் மகளிர் தினத்தை அனுசரிக்க ஆரம்பித்தன. 

3 /7

சமூகத்தின் மத்தியில் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என வலியிறுத்தியும், ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தியும் இந்த நாள் வருடா வருடம் அனுசரிக்கப்படுகிறது. சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் சாதனைகள் என அனைத்திலும் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 

4 /7

மகளிர் தினத்தை, “பெண்கள் மட்டும்தான் கொண்டாட வேண்டும், அந்த நாட்டுக்காரர்களோ இந்த நாட்டுக்காரர்களோ கொண்டாடக்கூடாது” என்பதெல்லம் இல்லை. பெண்களாக இருப்பவர்கள், பெண்களை மதிப்பவர்கள் யாராக இருந்தாலும் மகளிர் தினத்தை கொண்டாடலாம். இந்த தினத்தை இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகள் கொண்டாடுகிறது.

5 /7

பொதுவாக எந்த தினம் அனுசரிக்கப்பட்டாலும், அல்லது எந்த பண்டிகை கொண்டாடப்பட்டாலும் அதற்கு பின்னால் ஒரு பெரிய வியாபார நோக்கம் இருக்கும். மகளிர் தினத்தை வைத்தும் சிலர் வியாபாரம் செய்கின்றனர் என்றாலும், இது பெண்களை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் ஒரு தினமாக பார்க்கப்படுகிறது. மகளிர் தினத்தை கொண்டாடுவதால் நிச்சயமாக பெண்களுக்குதான் அதிக பலன்கள் உள்ளது. இந்த நாளில் பெண்கள் முன்னேற்றத்திற்கான சில திட்டங்களை துவக்கலாம். பிறருக்கு சம உரிமை குறித்தும் பெண் உரிமை குறித்தும் எடுத்து கூறலாம். 

6 /7

மகளிர் தினத்தை கொண்டாடுவது எப்படி? ஒன்றுமே செய்ய வேண்டாம். நீங்கள் சாமானியராக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு துணையாக நிற்கும் பெண்களுக்கு நன்றி கூறுங்கள். அதைத்தாண்டி எதையாவது செய்ய நினைத்தால், உங்களை சார்ந்த பெண்கள், அல்லது உங்களுக்கு தெரிந்த பெண்கள் செய்த சாதனைகளை கொண்டாடுங்கள். தொழில் ரீதியாக ஏதாவது செய்திருந்தால் மட்டும் சாதனை என்று கருதிவிட வேண்டாம். ஒரு குடும்பத்தையே கட்டியமைத்து காத்துக்கொண்டாலும் சாதனைதான், குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொண்டாலும் சாதனைதான். அனைத்தையும் கொண்டாடலாமே...

7 /7

மகளிர் தினத்திற்கு ஊதா நிறம் (Purple) சின்னமாக கருதப்படுகிறது. வாக்குரிமைக்காக போராடிய காலம் மலையேறி, இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று கூறும் அளவிற்கு வளர்ந்திருக்கிறோம். ஆனாலும், சம உரிமை பெற்றுவிட்டோமா என்றால், அது இன்னும் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. இன்னும் பெரும் பாதைகளை கடக்க இருக்கும் சமயத்தில், இந்த மகளிர் தினத்தன்று மட்டுமன்றி அனைத்து தினங்களிலும் மகளிருக்கு மரியாதை கொடுத்து, பாதுகாக்க வேண்டும் என ஒவ்வொரு ஆண் மகனும் எண்ணம் கொள்ள வேண்டும்.