HC: பெண்களின் தனியுரிமையை மீறும் புகைப்படங்களை பொதுத்தளங்களில் வெளியிடக்கூடாது
அவதூறு பரப்பும் விதமாக தனது புகைப்படங்களையோ, காட்சிகளையோ வெளியிடக்கூடாது என்று மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா மனு தாக்கல் செய்திருந்தார்
புதுடெல்லி: சசிகலா புஷ்பாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு.
பெண்களின் தனியுரிமையை மீறும் புகைப்படங்களை பொதுத்தளங்களில் வெளியிடக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. பெண்களுக்கு உயர்ந்த இடத்தை கொடுக்கும் நிலையில் அவர்களை அவமதிக்கும் விதத்தில் செயல்படக்கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவருமான சசிகலா புஷ்பா, பேஸ்புக் இந்தியா, கூகுள் இந்தியா, யூடியூப் மற்றும் ட்விட்டர் இந்தியா சமூக ஊடக தளங்கள் தனது எந்தவொரு "அவதூறு பரப்பும்" புகைப்படத்தையோ காட்சியையோ வெளியிடக்கூடாது என்று வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு விசாரித்தது. தங்கள் தளங்களில் இருந்து ஆட்சேபிக்கத்தக்க விஷயங்களை அகற்ற வேண்டுமென சமூக ஊடக தளங்களுக்கு நீதிமன்ற அமர்வு பரிந்துரைத்தது.
Also Read | பார்வை இழப்பைத் தடுக்கக்கூடிய கண் சொட்டு மருந்து தயார்
பேஸ்புக் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி நீதிமன்றத்தில் இது ஒரு இடைக்காலத் தீர்வாக மட்டுமே இருக்கும் என்றும், எந்தவொரு உள்ளடக்கத்திலும் சமூக ஊடகங்கள் எதுவும் செய்யமுடியாது என்றும் தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும், ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை சரிபார்த்து, அவற்றை அகற்றுவதற்கான ஒரு அமைப்பு சமூக ஊடகங்களிடம் உள்ளது என்றும், நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு கட்டுப்படத் தயாராக இருப்பதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.
கூகுள் மற்றும் யூடியூப் சார்பில் வாதங்களை முன்வைத்த மூத்த வழக்கறிஞர் அருண் கத்பாலியாவும் பேஸ்புக் கூறியதைப் போலவே இதுவொரு இடைக்கால நிவாரணமாகவே இருக்கும் என்றும், URLகளை மட்டுமே முடக்கும் அதிகாரம் தங்களுக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.
அனைத்து தரப்பினரின் வாதங்களை கேட்டபின், ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து ஆலோசனை செய்வதற்கு ஜூலை 8ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்த நீதிமன்ற அமர்வு, ஜுலை எட்டாம் தேதிக்கு அடுத்த வழக்கை ஒத்திவைத்தது.
Also Read | 97 போயிங் விமானங்களுக்கான ஆர்டர் ரத்து
ஒற்றை நீதிபதி அமர்வின் தீர்ப்புக்கு எதிரான சசிகலா புஷ்பாவின் மேல் முறையீட்டை இந்த நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. பேஸ்புக் இந்தியா, கூகிள் இந்தியா, யூடியூப் மற்றும் ட்விட்டர் இந்தியா மீது 2016 செப்டம்பர் 29ஆம் தேதியன்று சசிகலா புஷ்பா மனு தாக்கல் செய்திருந்தார். தனது எந்தவொரு "கேவலமான" புகைப்படங்களை வெளியிடுவதிலிருந்தோ அல்லது காண்பிப்பதிலிருந்தோ தடுத்து நிறுத்தக் கோரிய சசிகலா புஷ்பாவின் மனுவை தள்ளுபடி செய்த ஒற்றை நீதிபதி அமர்வானது ஜூன் 3 ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது.
"மூடிய கதவுகளுக்குப் பின்னால் அரசியல்வாதிகள் எப்படி நடந்துக் கொள்கின்றனர் என்பதை தெரிந்துக் கொள்ள வாக்காளர்களுக்கு நிச்சயமாக உரிமை உண்டு" என்று கூறிய அந்த தீர்ப்புக்கு எதிராக சசிகலா புஷ்பா மேல் முறையீடு செய்திருந்தார்.