நோர்வே ஏர்: 97 போயிங் விமானங்களுக்கான ஆர்டர் ரத்து

நோர்வே ஏர் விமான நிறுவனம் 97 போயிங் விமானங்களுக்கான கொள்முதல் ஆர்டர்களை ரத்து செய்தது

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jun 30, 2020, 07:57 PM IST
நோர்வே ஏர்: 97 போயிங் விமானங்களுக்கான ஆர்டர் ரத்து
File photo

கோபன்ஹேகன்: நோர்வே ஏர் விமான நிறுவனம் செவ்வாயன்று 97 போயிங் விமானங்களுக்கான கொள்முதல் ஆர்டர்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

குறைவான கட்டணத்தை நிர்ணயித்து பொதுமக்களுக்கு சிறந்த பயண அனுபவங்களைக் கொடுக்கும் நோர்வே ஏர் விமான நிறுவனம் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விமானப் பயணத்தை எளிதாக்குவதற்கு கவனம் செலுத்தும் நோர்வே விமான நிறுவனம், பிரீமியம் மற்றும் பொருளாதாரம் என இரண்டு வகுப்புகள் மட்டுமே கொண்ட விமானங்களை இயக்குகிறது. உள்ளன. பிஸினஸ் கிளாஸ் அல்லது முதல் வகுப்பு பிரிவுகள் நோர்வே விமான நிறுவனத்தின் விமானங்களில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனமான போயிங்கிடம் இருந்து 97 விமானங்களை வாங்குவதற்காக திட்டமிட்ட நார்வே ஏர் விமான நிறுவனம் அதற்கான ஆர்டரையும் கொடுத்திருந்தது.

ஐந்து எண்ணிக்கையிலான 787 ட்ரீம்லைனர்கள் மற்றும் 737 மேக்ஸ் விமானங்கள் 92க்கான கொள்முதல் ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளதாக நோர்வே விமான நிறுவனம், வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒஸ்லோவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நோர்வே விமான நிறுவனம், இந்த ஒப்பந்தம் தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள தொகையை திருப்பித் தரக் கோரி சட்டப்பூர்வ விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  மேலும், 737 மேக்ஸ் விமானத்தின் புதிய தொழில்நுட்ப அம்சத்தில் பழுது இருப்பது தொடர்பான உலகளாவிய கோரிக்கை மற்றும் 787 ரக விமானங்களின் எஞ்சினில் ஏற்படும் இயந்திர கோளாறுகளால் ஏற்பட்ட நஷ்டங்களுக்கும் நார்வே விமான நிறுவனம் இழப்பீடு கோருகிறது.

போயிங் விமான நிறுவானத்துடனான சமாதான பேச்சுவார்த்தைகள் "நியாயமான இழப்பீட்டுடன் கூடிய உடன்படிக்கைக்கு வழிவகுக்கவில்லை" என்றும் நோர்வே விமான நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

737 மேக்ஸ் ரக விமானங்கள் இந்தோனீசியா மற்றும் எத்தியோப்பியாவில் விபத்துக்கு உள்ளானதில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். விமானத்தின் புதிய தொழில்நுட்ப அம்சத்தில் பழுது இருப்பதாக கூறப்பட்டது.

737 MAX ரக விமானங்களால் ஏற்பட்ட விபத்துக்களைத் தொடர்ந்து, 2019 முதல் மார்ச் 12 முதல் இந்த ரக விமானங்களின் பயன்பாடு உலகம் முழுவதும் நிறுத்தப்பட்டது.

அதே நேரத்தில், ட்ரீம்லைனர் விமானங்களில் ரோல்ஸ் ராய்ஸ் என்ஜின்களில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாகவும் நார்வே விமான நிறுவனம் கூறுகிறது. பிரிட்டனை சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) தனது ட்ரெண்ட் 1000 (Trent 1000) என்ஜின்களில் சிக்கல்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். இது போயிங்கின் 787 ட்ரீம்லைனர் விமானத்திற்கு சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுபோன்ற பிரச்சனைகளால் போயிங்கின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டது. போயிங்கின் விமானத்தை பயன்படுத்துவதால் எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் சீர்குலைத்து போனதுடன், கணிசமான இழப்புகளும் ஏற்பட்டுள்ளது" என்று நோர்வே விமான நிறுவனம் கூறுகிறது.