நன்மை தீமைகளை எடைபோட்டு தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும்: கனிமொழி
தமிழக அரசு மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஒரு முடிவை எடுக்கும்போது, நன்மை தீமைகளை எடைபோட்டு தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்.
சென்னை: 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு புதிய பாடத்தொகுப்பு முறை தமிழக அரசு (TN Govt) அறிமுகப்படுத்தியது. இந்த புதிய முறைப்படி 5 பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் பெற்றோர், கல்வி ஆய்வாளர்கள் மற்றும் எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த பாடமுறை மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஆபத்து இருப்பதால் அதனை தமிழக அரசு மறுபரிசீலனை செய்திட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. புதிய பாடத்தொகுப்பு முறைக்கு எதிர்ப்பு கிளம்பியதால், ஏற்கனவே நடைமுறையில் இருந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 4 பாடத்தொகுப்புகள் கொண்ட பழைய திட்டமே தொடரும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை (School Education Department) அறிவித்துள்ளது. மேலும் புதிய பாடத்தொகுப்பு முறை அரசாணையை அரசு ரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தமிழக அரசின் புதிய பாடத்தொகுப்பு முறை ரத்து செய்யப்பட்டதை குறித்து, கருத்து தெரிவித்த திமுக எம்.பி. கனிமொழி (DMK MP Kanimozhi) அவர்கள், "தமிழக அரசு மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஒரு முடிவை எடுக்கும்போது, நன்மை தீமைகளை எடைபோட்டு தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும்" அறிவுரை வழங்கியுள்ளார்.
பிற செய்தி படிக்கவும் | இந்தியா தற்போது பாசிச நாடாக மாறி வருகிறது.... கனிமொழி ட்வீட்!
அவர் தனது ட்விட்டர் (Twitter) பக்கத்தில் கூறியதாவது, "11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பதில் முன்னர் அறிவித்த குழப்பமான முடிவை மாற்றி ஒரு முடிவை தமிழக அரசு எடுத்திருக்கிறது. அரசாங்கம் மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஒரு முடிவை எடுக்கும்போது, நன்மை தீமைகளை எடைபோட்டு தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும்.
ஆனால் இந்த அரசு எப்போதும் அறிவிப்புகளை வெளியிட்டு, பின்னர் அதைப்பற்றி சிந்திக்கின்றது. கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக ஏற்கனவே பெற்றோர்களும் மாணவர்களும் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். அரசு இதுபோன்ற முடிவுகளால் அவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை கொடுக்கக்கூடாது.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.