காடுகளின் அரசன் என வர்ணிக்கப்படும் யானையின் நிலை தற்போது மிகுந்த பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து உணவுக்காக ஊருக்குள் இறங்கி வரும் யானைகளைக் கத்தி, வேல்கம்பு கொண்டு மனித இனம் துரத்தி வருகிறது. மேலும், மின்சார வேலிகளைப் பொருத்தி யானைகளைக் கொல்வது, அவுட்டுக்காய் வைத்து யானைகளை நாசமாக்குவது என யானைகள் மீதான மனித இனத்தின் வெறுப்புச் செயல்கள் அதிகரித்திருக்கின்றன. தந்தத்திற்காக வேட்டையாடப்படுவது, ரயில்வே ட்ராக்கில் அடிக்கடி விபத்தில் சிக்குவது, சாலைகளில் வாகனங்களால் ஹாரன் அடிக்கப்பட்டு துன்புறுத்தப்படுவது என நாளுக்குநாள் யானைகள் மீதான கொடுமைகளை மனித இனம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மின்கம்பியை பிடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த பெண் காட்டு யானை


பயிர்களை சேதப்படுத்தும் யானைகளை, ‘யானைகள் அட்டகாசம்’, ‘யானைகள் செய்த அட்டூழியம்’ போன்ற பொதுச்சொற்களை சில ஊடகங்களும் பயன்படுத்துகின்றன. இதனால் பொதுச்சமூகத்தில் யானைகள் மீதான பிம்பம் மேலும் மோசமடையும் சூழல் உருவாகி வருகிறது. இதுமட்டுமல்லாமல், காட்டிற்குள் வாகனங்களை  துரத்தும் யானைகள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்படுகின்றன. இதனை காணும் வளரும் குழந்தைகள், யானையை ஒரு மோசமான மிருகமாக கட்டமைத்துக் கொள்ளும் ஆபத்துகள் அதிகளவில் நிகழ்கிறது. 


பெரும்பாலான ஊடகங்களில் காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்திவிட்டு போவது, மனிதர்களைக் கொன்றுபோடுவது போன்ற செய்திகளையே அதிகம் பரவுவதால், வளரும் தலைமுறையினர் யானை மீது ஒருவிதமான அச்சத்துடனேயே இருக்கின்றனர். ‘யானை’ சென்ற தலைமுறையினருக்கு எவ்வளவு ஆசையான மிருகமாக அணுகப்பட்டு வந்த நிலையில், தற்போதைய தலைமுறையினருக்கு யானையை கொடிய மிருகமாக மாற்றிய பிம்ப அரசியலை செய்த தவறை நாம் செய்திருக்கிறோம். 


அதனால்தான் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை கற்களால் தாக்குவதும், கொடுமைப்படுத்துவதும், மின்வேலிகளால் மாண்டுபோகும் யானைகளைக் கண்டு மகிழ்வதும் என சீழ்பிடித்த நிலையை நோக்கிச் செல்கிறோம். 


காடுகளில் ட்ரெக்கிங் போகும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள், யானைகளைத் தொந்தரவு செய்யாமல் ரசிக்கும் மனோபாவமே இருப்பதில்லை. அதனை வேண்டுமென்றே சீண்டும் வேலைகளில் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது, சில சமயம் வன ஊழியர்களும், டிரைவர்களும் செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். காட்டிற்குள் இருக்கும் யானையை புகைப்படம் எடுப்பது, அதன் ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுப்பது போன்ற சாகச மனநிலையில் திளைத்து ஊறுகிறது மனம். 


மேலும் படிக்க | பெட்டில் தான் தூங்குவேன்! அடம்பிடித்து தூங்கிய குட்டி யானை!


தனது வாகனத்தை துரத்தும் காட்டு யானையின் வீரியம் தெரியாமல் கொஞ்சமும் பயப்படாமல் அதனை வீடியோ எடுக்கும் மனநிலையை என்னவென்று எடுத்துக்கொள்வது ?. ஒருவிதமான அசட்டு மிருகமாக யானை அணுகும் பார்வையல்லவா அது. இப்படி பகிரப்படும் பெரும்பாலான வீடியோக்களில் யானைகள் தான் விரட்டுவதை போதும் என நினைத்துக்கொண்டு ஒருகட்டத்தில் நின்றுவிடுவதுண்டு. ஒரு காட்டின் அரசன், நமக்குத் தரும் மன்னிப்பு அது. ஆனாலும், அதைச் சாதகமாக எடுத்துக்கொண்டு, தொடர்ந்து யானையை சீண்டுவதும், யானையிடம் கத்துவதும், கூச்சலிடுவதும், ஹாரன் அடிப்பதும் என எவ்வளவு கொடுமைகளை மனித இனம் செய்கிறது என்று யானை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 


மிருகங்களை அணுகும் பழக்கவழக்கத்தை பள்ளியில் இருந்தே மாணவர்களிடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக ஊருக்குள் வரும் வன விலங்குகளின் மீதான கொடிய பிம்பங்களை அகற்றுவது சமூக ஊடகம் மற்றும் தமிழக அரசின் பங்களிப்பு என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் Vs விலங்குகள் என்னும் குறுகிய பார்வையில் இருந்து விலகி, இருதரப்பு பிரச்சனைகளையும் அணுகும் போக்கு வளர வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாகும். 


இந்தப் பிரச்சனை அப்படியே இப்போதும் சுற்றுலா பயணிகளிடையே தொடர்கிறது என்பதற்கு மற்றொரு உதாரணமாக நீலகிரியில் மேலும் ஒரு காட்டு யானை விரட்டு வீடியோ வெளிவந்துள்ளது. அந்த வீடியோ எடுக்கப்பட்டது தனியார் வாகனம் இல்லை. தமிழ்நாடு வனத்துறை வாகனத்தில் இருந்து என்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


நீலகிரி மாவட்டம் கூடலூர்  முதுமலை வன பகுதியானது 325 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்தப் பகுதியில் சில வாரங்களாக மழை பெய்து வந்த நிலையில், காடுகள் அனைத்தும் பச்சைப்பசேலென காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.  இதனிடையே, முதுமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் தங்களது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காட்டிற்குள் அழைத்துச் செல்வது வழக்கம். அதன்படி, நேற்று சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டு வனத்துறையினரின் வாகனம் காட்டிற்குள் சென்றது. 


மேலும் படிக்க | யானைக்குப் பிடித்த ‘மதம்’ - 5 மணி நேரம் பாகன்கள் போராட்டம்


அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த காட்டு யானை வாகனத்தை விரட்டியுள்ளது.  வாகன ஓட்டுனர் யானையிடம் இருந்து தப்பித்து வாகனத்தை பின்புறமாக இயக்கித் தப்பிக்கிறார். இதன் ஆபத்தை உணராமல், வாகனத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் ஆரவாரத்துடனும், மகிழ்ச்சியுடனும், வீடியோ எடுக்கின்றனர். இந்த வீடியோ ‘வழக்கம் போல்’ வைரலாகித் தொலைத்திருக்கிறது.!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR