Virat Kohli IPL 2008 Price: ஐபிஎல் தொடரில் விராட் கோலி 2008இல் முதல்முறையாக ஆர்சிபி அணியிடம் இருந்து பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா...? அதுகுறித்து இங்கு காணலாம்.
இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி (Virat Kohli) இதுவரை ஐபிஎல் ஏலத்திற்கு வந்ததே இல்லை. 2008ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடரில் (IPL 2008) அவர் ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடி உள்ளார். அவர் ஆர்சிபியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பின்னரும் கூட, ஆர்சிபி அணியில் மட்டுமே தான் விளையாட விரும்புவதாகவும் அதை தாண்டி வேறு அணியில் விளையாடும் நோக்கமே தனக்கு இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் 252 போட்டிகளில் விளையாடியிருக்கும் விராட் கோலி மொத்தம் 8004 ரன்களை குவித்துள்ளார். அதில் 55 அரைசதங்கள் மற்றும் 8 சதங்கள் அடங்கும்.
ஐபிஎல் தொடர்களில் இதுவரை 2 முறை ஆரஞ்ச் கேப்பை வென்றுள்ள விராட் கோலி, அதிகபட்சமாக 113 ரன்களை அடித்துள்ளார். பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் பெற்றுள்ளார்.
இவர் 2022ஆம் ஆண்டு விராட் கோலி ஆர்சிபியில் தனது கேப்டன்ஸி பொறுப்பை துறந்தார். கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இருந்து 15 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று வருகிறார்.
அதற்கு முன் 2018ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டு வரை ஆர்சிபியில் விராட் கோலி 17 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று வந்தார்.
அதற்கும் முன்பாக, 2014ஆம் ஆண்டில் இருந்து 2017ஆம் ஆண்டு வரை 12.5 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று வந்தார். 2013ஆம் ஆண்டில்தான் அவர் கேப்டனாக பொறுப்பேற்றார்.
இளம் வயதிலேயே நட்சத்திர அந்தஸ்தை விராட் கோலி பெற்றுவிட்ட நிலையில், 2011ஆம் ஆண்டில் இருந்து 2013ஆம் ஆண்டு வரை 8.28 கோடி ரூபாயை அவர் சம்பளமாக பெற்று வந்தார்.
அந்த வகையில், முதல்முறையாக ஐபிஎல் தொடங்கிய போது நடைபெற்ற ஏலத்தில் விராட் கோலி இடம்பெறவில்லை. அப்போது அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.
அதில், ஐபிஎல் அணிகள் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இருந்து தலா 1 வீரரை டிராஃப்டில் எடுக்க வேண்டும் என்பதால், விராட் கோலியை 12 லட்சம் ரூபாய்க்கும் (30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்) ஆர்சிபி அணி எடுத்தது.