Mpox என்றழைக்கப்படும் மங்கிபாக்ஸ், அதாவது குரங்கு அம்மை வைரஸ் மீண்டும் உலகம் மக்களை பீதியில் ஆழ்த்தும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) இந்த நோயின் மிகப்பெரிய பரவல் காணப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். டிசம்பர் 2022 இல், DRC அரசாங்கம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்தது. இப்போது இந்த வைரஸ் ஆப்பிரிக்காவில் 13 நாடுகளில் பரவியுள்ளதாகவும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 160 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது ஆப்பிரிக்காவுக்கு வெளியேயும் குரங்கு அம்மை பரவிவிட்டது. சமீபத்தில், பாகிஸ்தானின் தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகம் நாட்டில் இந்த வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள தகவலை உறுதிப்படுத்தியது. பாதிக்கப்பட்ட நபர் சவுதி அரேபியாவிலிருந்து வந்தவர் என்றும் வைரஸின் சரியான திரிபு பற்றி கண்டுபிடிக்க அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேபோல், ஸ்வீடனிலும் குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஸ்வீடிஷ் சுகாதார அதிகாரிகள், அந்த நபர், ஆப்பிரிக்காவில் தொற்றுக்குப் பிறகு கண்டறியப்பட்ட வைரஸின் கிளேட் 1 வகையால் பாதிக்கப்பட்டுள்ள்ளதை உறுதிப்படுத்தினர். இந்த திரிபு தீவிர நோய்த்தொற்றின் நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது. இது சாதாரண தொடர்பு, குறிப்பாக பாலியல் தொடர்பு மூலம் எளிதில் பரவுகிறது.
குரங்கு அம்மை என்பது மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கும் ஒரு வகை வைரஸ் ஆகும். இது பெரியம்மை போன்ற நோய் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால் அதன் அறிகுறிகள் குறைவாகவே இருக்கும். இந்த நோயில், காய்ச்சல், சோர்வு, உடல்வலி மற்றும் தோல் வெடிப்பு,கொப்பளங்காள் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த நோய் லேசானதாகவே இருக்கும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் இது தீவிர நிலையையும் அடையக்கூடும்.
பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் தொடர்பு கொள்வதால் குரங்கு நோய் பரவுகிறது. இது தோல் காயங்கள், பாதிக்கப்பட்ட நபரின் தோலோடு மற்றவரின் தோல் தொடர்பில் வருவது, பாதிக்கப்பட்ட நபருக்கு அருகில் சுவாசிப்பது அல்லது பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்தும் பொருட்களான படுக்கை, உடைகள் மற்றும் துண்டுகள் போன்றவற்றின் மூலம் பரவுகிறது.
காய்ச்சல், சோர்வு, தலைவலி, தசைகளில் வலி, உடலில் குளிர்ச்சியான உணர்வு, நிணநீர் கணுக்கள் வீக்கம், தோல் வெடிப்பு, கொப்பளங்காள் போன்றவை குரங்கு அம்மை காய்ச்சலின் அறிகுறிகளாகும். இதில் அரிப்பு, சொறி ஆகியவவை பொதுவாக முகத்தில் தொடங்கி பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது.
கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்வதில் சிறப்பு கவனம் செலுத்துவது, பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து தூரமாக விலகி இருப்பது, உங்கள் தோலில் ஏதேனும் காயம் இருந்தால், அதை மூடி வைப்பது, விலங்குகளுடனான தொடர்பைத் தவிர்ப்பது, பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வது, பகுதியில் குரங்கு காய்ச்சலின் தாக்கம் இருந்தால், தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகியவை இதற்கான பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக உள்ளன.
குரங்கு அம்மை கிளேட் I (Clade I) மற்றும் கிளேட் II (Clade II) என இரண்டு வகைப்படும். இந்த இரண்டு வகைகளில் கிளேட் I மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றது. இது பல தசாப்தங்களாக மத்திய ஆபிரிக்காவின் காங்கோ படுகையில் தன் கோர முகத்தை காட்டி வருகின்றது. கிளேட் II வகையில் தீவிரம் சற்று குறைவாக இருக்கும். மேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இது உள்ளது.
இதுவரை இந்தியாவில் குரங்கு அம்மையால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மையின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதை இந்திய அரசும் கண்காணிக்க ஆரம்பித்துள்ளது. ஆகையால், நாம் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மற்றும் தூய்மையில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். குரங்கு அம்மையின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.