மின்சார வாகன சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஓலா மின்சார ஸ்கூட்டர் இரு நாட்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது.
முன்னர் அறிவித்திருந்தபடி, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், நாட்டின் 75-வது சுதந்திர தினமான ஆக்ஸ்ட் 15 அன்று தனது ஓலா மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில், S1 ஸ்கூட்டரின் விலை ரூ .99,999-லும், S1 Pro-வின் விலை ரூ .1,29,999 லும் தொடங்குகிறது. மானியங்களைக் கொண்ட மாநிலங்களில், ஓலா எஸ் 1 பல பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட மிகவும் மலிவு விலையில் கிடைக்கும். உதாரணமாக, டெல்லியில் மாநில மானியத்திற்குப் பிறகு, எஸ் 1 ஸ்கூட்டரின் விலை வெறும் 85,099 ரூபாயாகவும், குஜராத்தில் 79,999 ரூபாயாகவும் உள்ளது. ரூ. 2,999 ரூபாயில் தொடங்கும் EMI திட்டத்திற்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் நிறுவனம் இணைந்துள்ளதாக ஓலா எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது.
Ola S1 மற்றும் Ola S1 Pro சாடின், மேட் மற்றும் பளபளப்பான பினிஷில் கிடைக்கும். வண்ணங்களில் சிவப்பு, நீலம், மஞ்சள், வெள்ளி, தங்கம், இளஞ்சிவப்பு, கருப்பு, கடற்படை நீலம், சாம்பல் மற்றும் வெள்ளை ஆகியவை அடங்கும். ஓலா எஸ் 1, ஐகானிக் ட்வின் ஹெட்லேம்ப்கள், எர்கோனாமிக் மற்றும் ஃப்ளூயிக் பாடி, உயர் ரக அலாய் வீல்கள், செதுக்கப்பட்ட இருக்கைகள் மற்றும் இரண்டு ஹெல்மெட்டுகளை வைக்கும் அளவிலான மிகப்பெரிய பூட் ஸ்பேஸ் ஆகியவற்றுடன் வரும்.
181 கிமீ தூரம், 3.0 வினாடிகளில் 0-40 கிமீ வேகம், 115 kmph டாப் ஸ்பீட் ஆகியவற்றுடன் இந்த மின்சார ஸ்கூட்டர் புதிய எல்லைகளைத் தொட்டுள்ளது. இது 3.97 கிலோவாட் பேட்டரி திறன் கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இருக்கும் மின்சார வாகனத்தின் திறனை விட இது 30% அதிகமாகும். மேலும் 8.5 கிலோவாட் உச்ச சக்தி கொண்ட பிரிவில் இது மிகவும் சக்திவாய்ந்த மோட்டார் ஆகும். ஓலா எஸ் 1 ஸ்கூட்டரில் Battery Management System (BMS) என்ற நவீன அம்சமும் உள்ளது.
ஓலா எஸ் 1 இல் பிசிக்கல் சாவி இல்லை. டிஜிட்டல் கீ அம்சத்துடன் இது தொலைபேசியுடன் இணைகிறது. ஓட்டுனர் அருகில் இருப்பதை ஸ்கூட்டர் தானாகவே தெரிந்து கொண்டு அன்லாக் ஆகும். ஓட்டுனர் விலகிச் சென்றால் தானாகவே லாக் ஆகி விடும். இது, மல்டி மைக்ரோஃபோன் அரே, AI பேச்சு அங்கீகார வழிமுறைகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள 7-இஞ்ச் டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே இது வரை எந்த ஸ்கூட்டரிலும் இல்லாத பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. ஓலா எஸ் 1-ல் திருட்டு எதிர்ப்பு எச்சரிக்கை அமைப்பு, ஜியோ-ஃபென்சிங் மற்றும் சுடர்-தடுப்பு மற்றும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பு கொண்ட பேட்டரி ஆகியவவை உள்ளன. இதில் முன்புறத்திலும் பின்புறத்திலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 'ஹில் ஹோல்ட்' அம்சமும் உள்ளன. இவை போக்குவரத்து நெரிசலில் எளிதாக ஸ்கூட்டரை செலுத்த உதவும்.
ஓலா எஸ் 1 ஸ்கூட்டருக்கான விற்பனையை இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 2021 செப்டம்பர் 8 முதல் தொடங்கும். அக்டோபரில் 1,000 நகரங்களில் விநியோகம் தொடங்கும்.