PM Ujjwala scheme Extended for FY25 : 2024-25 நிதியாண்டில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (The Cabinet Committee on Economic Affairs (CCEA)) முடிவு செய்துள்ளது.
பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.300 மானியம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது. எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் நிதியாண்டான 2024-25க்கு நீட்டிக்கும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (CCEA) முடிவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, 5 கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட உஜ்வாலா யோஜனா திட்டத்தினால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பலனடைந்து வருகின்றன. தற்போது ஏறக்குறைய 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு 12,000 கோடி ரூபாய் செலவாகும்.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த, வயது வந்த பெண்களுக்கு டெபாசிட் இல்லாத எல்பிஜி இணைப்புகளை வழங்குவதற்காக, மே 2016 இல், PM உஜ்வாலா யோஜனா (PMUY) என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
திட்டம் தொடங்கப்பட்டபோது, தகுதியான குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், பயனாளிகள் சந்தை விலையில் எல்பிஜி சிலிண்டர்களை வாங்க வேண்டியிருந்தது.
எரிபொருள் விலை உயர்வை ஈடுகட்டும் விதமாக உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 12 ரீஃபில்களுக்கு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இது மே 2022 இல் அறிவிக்கப்பட்ட மானியத் திட்டம் ஆகும்
கடந்த அக்டோபர் 2023 இல், பிரதமர் உஜ்வாலா மானியத்தை சிலிண்டருக்கு ரூ.100 முதல் ரூ.300 வரை உயர்த்தியது.
பிரதமர் உஜ்வாலா மானியமானது, நாட்டின் கிராமப்புற மற்றும் ஏழைக் குடும்பங்களில் மலிவு விலையில் சமையல் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
PM உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம், சமையல் எரிவாயு இணைப்பு வைத்திருப்பவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.