ராம நவமி திருநாளில் ஸ்ரீ ராமர் அருள் புரியும் கோவில்களின் ஆன்மீக உலா

ராமர் அவதரித்த திருநாளான இன்று ராம நவமி நாடு முழுதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. மக்களுக்காக ஒரு உதாரணமாக வாழ்ந்து காட்டிய உதாரண புருஷர் ஸ்ரீ ராமர்.

 

ராம நவமியான இன்று தமிழகத்தில் உள்ள முக்கிய ஐந்து ராமர் கோவில்களை இங்கு தரிசனம் செய்யலாம்.

1 /5

ஏரிகாத்த ராமர் கோவில் சென்னையிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் மதுராந்தகத்தில் உள்ளது.  இலங்கையிலிருந்து ராமர், அன்னை சீதை மற்றும் இலக்குவனனுடன் அயொதிக்கு திரும்பியபோது, இங்கு புஷ்பக விமானத்தில் வந்திறங்கினர் என்பது ஐதீகம். ஆங்கிலேய ஆட்சியில் ஒரு மழைக்காலத்தில் மதுராந்தகம் ஏரியின் சீற்றத்தால் பெரும் அபாயம் எற்பட்டது. இதனால் கலக்கமுற்ற மாவட்ட ஆட்சியர், தினமும் இரவில் ஏரியில் நீரின் அளவைக் காண சென்றதாகவும் அங்கு ராமரே வெள்ளம் ஊருக்குள் வராமல் பார்த்துக்கொண்டதை அவர் கண்டதாகவும் கூறப்படுகின்றது. அதானாலேயே இந்த ராமர் கோவிலுக்கு ஏரிகாத்த ராமர் கோவில் என பெயர் வந்தது. இங்கு ஆண்டு முழுவதும் பல பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

2 /5

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள கோத்தண்டராமர் கோயில் புகழ்பெற்ற ராமர் ஆலையங்களில் ஒன்றாகும். இந்த ஆலையம் ராமேஸ்வரத்தின் தென் மூலையில் அமைந்துள்ளது. இங்கிருந்துதான் ராமர் இலங்கை செல்வதற்கான பாலத்தைக் கட்டினார் என கூறப்படுகின்றது. ராவணனுடன் தான் செய்த பாவங்களிலிருந்து விடுபட ராமர் பிரார்த்தனை செய்த இடமாகவும் இது கருதப்படுகின்றது. கோதண்டராமர் கோவில் கடலால் சூழப்பட்ட அழகிய சூழலில் அமைந்துள்ளது.

3 /5

திருவண்ணாமலையிலிருந்து 55 கி.மீ தூரத்தில் நெடுங்குணத்தில் ஸ்ரீ யோகா ராமர் கோயில் அமைந்துள்ளது. ராமர் வில் மற்றும் பிற ஆயுதங்கள் இல்லாமல், அமைதியான நிலையில் அமர்ந்திருப்பதைக் காணக்கூடிய இந்தியாவின் ஒரே கோயில் இதுவாகும். அன்னை சீதை தாமரை மலருடன் காட்சி தருகிறார். லட்சுமணன் தனது ஆயுதங்களுடன் ராமருக்குப் பின்னால் நிற்கிறார். இங்கே அனுமனின் தோரணையும் அபூர்வமானதாக கருதப்படுகின்றது. விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட இந்த கோயில், ராமரை மிகவும் அமைதியான நிலையில் சித்தரிக்கிறது. இங்கு ரமார் வலது கையை மார்போடு வைத்து கண்களை மூடிக்கொண்டு காட்சி அளிகிறார்.

4 /5

திருவெல்லியங்குடியில் உள்ள கோலவிழி ராமர் கோயில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இது ஒரு மத முக்கியத்துவம் வாய்ந்த தலமாகும். கும்பகோணத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 1,400 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ வம்சத்தால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது சோழர், விஜயநகர மற்றும் மராட்டிய பேரரசுகளால் மேலும் விஸ்தரிக்கப்பட்டது.

5 /5

சேலத்தில் உள்ள அயோத்தியப்பட்டினம் நகரில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான கோயிலாகும் இது. ராமரின் கால்தடம் இங்கு உள்ளதாகக் கூறப்படுகின்றது. ராவணனை வென்று அயோத்தி திரும்பிய ராமர் இங்கு ஓய்வெடுத்ததாகவும் கூறப்படுகின்றது. இங்கு வந்த ராமர், அன்னை சீதை, இலக்குவன், ஆஞ்சனேயர், விபீஷணன், சுக்ரீவர் ஆகியோருடன் வந்தார். அவர்கள் அனைவரின் சிலைகளையும் இங்கே காணலாம்.