Income Tax Notice: நாட்டில் உள்ள மக்களின் நிதி நடவடிக்கைகளை வருமான வரித்துறை கண்காணித்து வருகிறது. வருமான வரித்துறையிடம் வரி செலுத்தும் அனைவரது நிதித் தகவலும் இருக்கின்றது. வரி செலுத்தும் ஒவ்வொரு நபரும் ஐடிஆர் நிரப்புவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
Income Tax Notice: பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமான வரித்துறையினர் இந்நாட்களில் மிகுந்த விழிப்புடன் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில், வருமான வரித் துறை மற்றும் வங்கிகள், மியூசுவல் ஃபண்டு நிறுவனங்கள், தரகர் தளங்கள் போன்ற பல்வேறு முதலீட்டு தளங்கள் பொதுவாக பொதுமக்களுக்கான பண பரிவர்த்தனை விதிகளை கடுமையாக்கியுள்ளன. இப்போது, இந்த முதலீடு மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மட்டுமே பண பரிவர்த்தனையை அனுமதிக்கின்றன. இந்த வரம்புகள் மீறப்பட்டால், வருமான வரித்துறை (Income Tax Department) வரம்பை மீறிய நபருக்கு நோட்டீஸ் அனுப்பலாம்.
அதிக மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகளை (Cash Transactions) செய்திருந்தால், அது குறித்து வரி செலுத்துவோர் (Taxpayers) வருமான வரிக் கணக்கில் (ITR) தெரிவிக்க வேண்டும். ஒரு தனிநபர் அதிக மதிப்புள்ள ரொக்கப் பரிவர்த்தனைகளைச் செய்தால், வருமான வரித் துறையின் நோட்டீசை (Income Tax Notice) பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பணம் தொடர்பான வெவ்வேறு பரிவர்த்தனைகளில் வங்கிகள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், தரகு நிறுவனங்கள் மற்றும் சொத்துப் பதிவாளர்கள் ஆகியவை அடங்கும். அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளின் மதிப்பு ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறினால், அது எப்போதும் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு, அது குறித்த விவரங்களை வருமான வரி தாக்கலில் தெரிவிக்காத தனிநபர்களின் நிதிப் பதிவேடுகளைப் பெறுவதற்கு வருமான வரித் துறை பல அரசு நிறுவனங்களுடன் செயல்முறைகளைக் கொண்டுள்ளது.
பல விதமான நடவடிக்கைகள் நாம் வருமான வரி நோட்டீசை பெற காரணமாகின்றன. அவற்றில் முக்கிய 5 பண பரிவர்த்தனைகளின் விவரங்களை பற்றி இங்கே காணலாம்.
வங்கி FD இல் உள்ள பண வைப்புத்தொகை ₹10 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலையான வைப்புகளில் ஒருவரது வைப்புத்தொகை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருந்தால், அதைப் பற்றிய தகவலை வங்கிகள் வெளிப்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.
வங்கிக் கணக்கில் ரொக்க வைப்புத் தொகை ₹10 லட்சம் ஆகும். சேமிப்புக் கணக்கு (Savings Account) வைத்திருப்பவர் ஒரு நிதியாண்டில் ₹10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், வருமான வரித் துறை வருமான வரி நோட்டீஸ் அனுப்பலாம். இதற்கிடையில், ஒரு நிதியாண்டில் ₹10 லட்சம் வரம்பைத் தாண்டிய வங்கிக் கணக்கில் ரொக்க வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவை பற்றிய விவரங்கள் வரி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். நடப்புக் கணக்குகளில், இதன் வரம்பு ₹50 லட்சம்.
CBDT விதிமுறைகளின்படி, கிரெடிட் கார்டு பில்களுக்கு (Credit Cards) ₹1 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக செலுத்தினால் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும். கூடுதலாக, கிரெடிட் கார்டு பில்களை செட்டில் செய்ய ஒரு நிதியாண்டில் ₹10 லட்சம் அல்லது அதற்கு மேல் செலுத்தப்பட்டால், அந்த தொகையை பற்றியும் வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.
சொத்துப் பதிவாளர், ₹30 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு அசையாச் சொத்தின் ஏதேனும் முதலீடு அல்லது விற்பனை பற்றிய தகவல்களை வரி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். ஆகையால், எந்தவொரு ரியல் எஸ்டேட் சொத்து வாங்கினாலும் விற்றாலும், வரி செலுத்துவோர் தங்கள் பணப் பரிவர்த்தனையை படிவம் 26AS இல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள், பத்திரங்கள் அல்லது கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், இந்த முதலீடுகளில் தங்களின் பணப் பரிவர்த்தனை ஒரு நிதியாண்டில் ₹10 லட்சத்தைத் தாண்டாமல் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். வரி செலுத்துவோரின் அதிக மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகளைக் கண்டறிய வருமான வரித் துறை, ஏஐஆர் (AIR) அதாவது நிதிப் பரிவர்த்தனைகளின் வருடாந்திர தகவல் அறிக்கை (Annual Information Return) அறிக்கையை உருவாக்கியுள்ளது.