மோடி அரசு விரைவில், 2021ம் ஆண்டின் மின்சாரம் திருத்த மசோதா, 2021 (Electricity Amendment Bill 2021) அறிமுகப்படுத்த உள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் அதை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2021ம் ஆண்டின் மின்சாரம் திருத்த மசோதாவில், புதிய திருத்தப்பட்ட சட்டத்தின்படி, நுகர்வோர் மொபைல் இணைப்பை போர்ட் செய்வதைப் போலவே மின்சார இணைப்பையும் மாற்ற முடியும். இதன் காரணமாக மின் விநியோக நிறுவனங்களிடையே போட்டி அதிகரிக்கும். இதனால் நுகர்வோருக்கு நேரடியாக பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் மழை கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய 17 மசோதாக்களில் மின்சாரம் திருத்த மசோதாவும் உள்ளது. இது நடந்தால், மின் விநியோகத் துறையில் ஒரு முக்கிய சீர்திருத்தமாக இருக்கும். இது நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கும்
புதிய திருத்தப்பட்ட மின்சாரச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், விநியோக வணிகத்திற்கான உரிமம் ரத்து செய்யப்படும். இதன் மூலம் அதிக அளவில் மின் விநோயோக நிறுவனங்கள் ஏற்படுத்தப்படலாம். இது தவிர, இந்த சட்டத்தின் கீழ் மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை வலுப்படுத்துவதற்கான அம்சம் இருக்கும்.
இது மின்சார நுகர்வோருக்கு நேரடியாக பயனளிக்கும். தற்போது, ஒரு சில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுமே மின் விநியோகத் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே, நுகர்வோர் தேர்வு இல்லை. இந்த மாற்றத்திற்குப் பிறகு, நீங்கள் சரியான சேவை வழங்காத நிறுவனங்களை விலக்கி விட்டு, சிறந்த சேவையை வழங்கும் அந்த நிறுவனத்திடமிருந்து மின்சார விநியோகத்தை பெறலாம்.
இந்த மசோதாவில், நுகர்வோருக்கு, முன்னறிவிப்பு ஏதும் இன்றி மின்சாரத்தை துண்டித்தால், நுகர்வோருக்கு இழப்பீடு செலுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. மின் தடைக்கு முன்பு மின் நிறுவனம் நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்கு அப்பால் மின்வெட்டு ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்க வேண்டும் என விதி உள்ளது.