ராயப்பேட்டை அலுவலகத்தில் அதிமுக ஆலோசனைக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியே வந்து அளித்த ஒரு பேட்டியில் இருந்து தீப்பொறியாக கிளம்பியது ஒற்றைத் தலைமைக் கோரிக்கை. அதிலிருந்து ஒரு மாத காலத்திற்கு நடந்தவை அனைத்தும் அடுத்தடுத்த பொலிட்டிக்கல் ட்ராமாக்கள். அதிமுகவில் ஓ.பி.எஸ் தரப்பு, இ.பி.எஸ் தரப்பு இரண்டாகப் பிரிந்து அவரவர் ஆதரவாளர்கள் மாறி மாறி ‘உண்மைகளை’ பேசி வந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர கூட்டப்பட்ட பொதுக்குழு முதலில் ‘சப்’பென்று ஆனது. ஒன்றுமே இல்லாத பொதுக்குழுவுக்கு வானகரம் முழுக்க ட்ராபிக்கை உருவாக்கிவிட்டீர்களே நியாயமா ? என்று மீம் கிரியேட்டர்களே கேள்வி கேட்கும் அளவுக்கு காட்சிகள் அரங்கேறின. அதன்பிறகு, நீதிமன்றம், பொதுக்குழுத் தடை எல்லாம் தாண்டி ஒருவழியாக நடந்தது பொதுக்குழு. 


மேலும் படிக்க | ஓங்கியது எடப்பாடி கை | அலுவலகத்தின் சாவியை பெற்றார் பழனிசாமி


அன்றே அதிமுக தலைமை அலுவலகத்தில் இ.பி.எஸ் தொண்டர்களும், ஓ.பி.எஸ் தொண்டர்களும் வன்முறையில் ஈடுபட்டனர். நிலைமையை பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வருவாய்த்துறை, நேராக வந்து அதிமுக அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தது. அதன்பிறகு அதிமுகவின் இரண்டு தரப்புக்கும் உள்ள ஒரே கேள்வி, சாவி யாருக்கு ? என்பதே!


மீண்டும் வழக்கு.  மீண்டும் விசாரணை. ஒருவழியாக அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படையுங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு எடப்பாடி தரப்பு மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. இந்த உத்தரவோடு நிற்காமல் கூடவே ஒரு கெடுவும் சென்னை உயர்நீதிமன்றம் விடுத்தது. பாதுகாப்புக் கருதி ஒருமாத காலத்திற்கு அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தொண்டர்கள் யாரும் வரக்கூடாது என்று. 


இதற்கிடையில் இ.பி.எஸ் ஓ.பி.எஸ்ஸை நீக்கினார் ; ஓ.பி.எஸ் இ.பி.எஸ்ஸை நீக்கினார் ; அவர்கள் இவர்களை நீக்கினார்கள் ; இவர்கள் அவர்களை நீக்கினார்கள் ; இப்படியே நீக்கி நீக்கி அரங்கேறிய காட்சிகளை அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். 


இந்த களேபரங்களுக்கு இடையிலும் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி கிடைத்தது எடப்பாடி தரப்புக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும், சாவியைத் திறந்து அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே சென்ற எடப்பாடி தரப்புக்கு பல்வேறு அதிர்ச்சிகள் காத்துக்கொண்டிருந்தன.! 


நீதிமன்ற உத்தரவுப்படி, முறைப்படி இன்று சாவி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து, அலுவலகத்தின் உள்ளே பார்த்ததில் பல ஆவணங்கள் காணாமல் போயிருந்ததாகவும், ஜெயலலிதாவின் நினைவுப் பரிசுகள் பலவும் உடைக்கப்பட்டும், சிலது காணாமல் போயிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அதிமுக அலுவலகத்தின் 2வது தளத்தில் உள்ள வெள்ளி வேல், செங்கோல்கள் ஆகியவை திருடுபோயுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். 


மேலும் படிக்க | அதிமுக அலுவலகம்: இபிஎஸ் வெற்றி, ஓபிஎஸ் தோல்வி ஏன்? 61 பக்க தீர்ப்பின் சாராம்சம் என்ன


ஆவணங்கள், முக்கியமானப் பொருட்கள் காணாமல் போயிருப்பது இ.பி.எஸ் தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சி.வி.சண்முகத்தின் பகிரங்கமான குற்றச்சாட்டுகளுக்கு ஓ.பி.எஸ் தரப்பு என்ன சொல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ