ஓங்கியது எடப்பாடி கை | அலுவலகத்தின் சாவியை பெற்றார் பழனிசாமி

அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Jul 20, 2022, 02:56 PM IST
  • அதிமுக அலுவலக சீல்-ஐ அகற்ற உத்தரவு
  • எடப்பாடி கைக்கு போகிறது அலுவலக சாவி
  • ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்த அடி
ஓங்கியது எடப்பாடி கை | அலுவலகத்தின் சாவியை பெற்றார் பழனிசாமி title=

அரசாங்கத்தால் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல்-ஐ அகற்றவும் அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி கையில் ஒப்படைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 11ஆம் தேதி அதிமுக அலுவலகத்திற்கு முன் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் கற்களை கொண்டு தாக்கிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அதனை நீக்க வேண்டும் என்று அதிமுகவிற்கு உரிமை கோரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் நீதிமன்றம் சென்றனர். அந்த வழக்கின் தீர்ப்பு இன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | “இனிமேலாவது இதை பண்ணுங்க” கமல்ஹாசன் கண்ணீர்

வழக்கு விசாரணையின் போது, தலைமை அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எந்த நீதிமன்றங்களிலும் வழக்கு நிலுவையில் இல்லை எனவும்,  வழக்கு நிலுவையில் இருந்தால் சீல் வைக்க முடியாது எனவும், பொது அமைதிக்கு  குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது எனவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானம் ஏற்படவில்லை எனவும், மீண்டும் பிரச்னை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் பொது அமைதி, மக்கள், பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு கருதி  சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யக் கூடாது எனவும் வாதிட்டார்.

சீல் வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரியையோ, சிவில் நீதிமன்றத்தையோ அணுகலாம் எனவும் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சம்பவ இடத்தில் பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பு வீரர்களை தவிர வேறு எந்த போலீசாரும் இல்லை எனவும், என்ன நடந்தது என்பதற்கு வீடியோ ஆதாரங்களே போதுமானது எனவும் தெரிவித்தார்.

கட்சி அலுவலகம் அவருக்கு சொந்தமானதாக இருந்தால் அவர் ஏன் அலுவலக கதவை உடைத்து கோப்புகளை எடுத்து செல்ல வேண்டும்? என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மூத்த வழக்கறிஞர், சம்பவம் நடந்த தேதியில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை பன்னீர்செல்வம் தனது மனுவில் ஒப்புக் கொண்டுள்ளார் எனக் குறிப்பிட்டார். பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கட்சியில் தனது பதவி என்ன என்பதை கட்சி அலுவலக உரிமை தொடர்பான விசாரணையில் தீர்மானிக்க முடியாது எனவும், பெரும்பான்மையான பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் மட்டுமே தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பதாக கருத முடியாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் கொண்டு பள்ளிக்கு தீ? வெளியான அதிர்ச்சி தகவல்!

கட்சி அலுவலகத்தின் உரிமை யாருக்கு என்பதை உரிமையியல் நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும் எனவும், கட்சி அலுவலகம் யாரிடம் இருக்கிறது என்றுதான் ஆர்.டி.ஓ பார்க்க வேண்டுமே தவிர  யாருக்கு உரிமை உள்ளது என்பதை தீர்மானிக்க முடியாது. இரு தரப்பினருக்கும் இடையே உள்ள சர்ச்சையை நீதிமன்றத்தால் மட்டுமே தீர்க்க வேண்டும் என்பதால், அதுவரை அலுவலகத்தை மூடி வைத்திருக்கலாம் என்றும் பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. பொதுக்குழு நடக்கும் போது மாநிலம் முழுவதும் இருந்து கட்சியினர் வருவர் என்பதால், கட்சி அலுவலகத்தை பூட்டி வைக்கும் பழக்கம் இல்லை எனவும், அப்படி தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றதாகவும், ஆனால் பழனிச்சாமி தரப்பின் நான்கு மாவட்ட செயலாளர்கள் வெளியில் அமர்ந்து கொண்டு உள்ளே நுழைவதை தடுத்ததாகவும் பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.

கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முடியாது என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை எனத் தெரிவித்த பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள்,  பொதுக்குழுவுக்கு அனுமதியளித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்கும்படி தீர்ப்பளித்துள்ளனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News