அதிரடி நீர்ப்பாசனத் துறையின் தூதரான 5-வயது சிறுவன்!!

நீர்ப்பாசனத் துறையின் தூதரான 5-வயது சிறுவன் அமைச்சரையும்; அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய குட்டி ஜீனியஸ்.  

Last Updated : Feb 5, 2018, 02:54 PM IST
அதிரடி நீர்ப்பாசனத் துறையின் தூதரான 5-வயது சிறுவன்!! title=

தெலங்கானா அரசு, பண்டில்லாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 5-வயது சிறுவனைப் பாசனத் திட்டங்களுக்கான நியமனத் தூதராக நியமித்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தெலங்கானாவில் ஷாபுர் நகரில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையில் பணிப்புரிந்துவரும் தொழிலாளியின் மகன் நேஹால். யு.கே.ஜி படித்துவரும் நேஹாலுக்கு அரசுத் திட்டங்கள் பற்றி அபார அறிவு இருந்துள்ளது. 

இதையடுத்து, அவர் தன் பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் விவசாயத்தைப் பற்றியும் நீர்ப்பாசனத் திட்டங்கள் பற்றியும் ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்துகொள்வாராம். நீர்ப் பாசனத் திட்டங்கள் பற்றி நேஹாலுக்கு இருக்கும் புரிதல், பண்டில்லாபள்ளி கிராம மக்களை வியக்க வைத்தது. 

நேஹால் பற்றி தெலங்கானா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அதையடுத்து, நேற்று ஹைதராபாத்தின் ஜலசோத்ஷாவில் அமைச்சர் ஹரிஷ் ராவ், உயர் அதிகாரிகள், பொறியாளர்கள் முன்னிலையில் சிறுவன் நேஹால் நீர்ப்பாசனத் திட்டங்கள் பற்றி விவரித்தார். சுமார் 20 நிமிடம் உரையாற்றிய சிறுவன் நேஹால் கிருஷ்ணா, கோதாவரி நதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நீர்ப்பாசனத் திட்டங்கள், மறுவடிவமைப்புக்கான அவசியம் என அனைத்துத் தகவல்களையும் விரிவாக விளக்கினார். 

நேஹால் பேசி முடித்ததும் அமைச்சர் ஹரிஷ் ராவும் அதிகாரிகளும் வாயடைத்துப் போனார்களாம். சிறுவனைக் கட்டியணைத்துக்கொண்ட அமைச்சர் ஹரிஷ், ``இச்சிறுவனைத் தெலங்கானாவின் நீர்ப்பாசனத் திட்டங்களின் நியமனத் தூதராக (Brand ambassador) நியமிக்கிறேன்' என்றார். 

மேலும் நேஹாலின் படிப்புச் செலவை நீர்ப்பாசனத்துறை ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

 

 

Trending News