Villupuram Septic Tank Girl Death Latest Updates: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து யூகேஜி வகுப்பில் பயிலும் மாணவி லியா லட்சுமி(5) நேற்று உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பள்ளி இடைவேளையின் போது வெளியே சென்ற மாணவி லியா லட்சுமி, மீண்டும் வகுப்பறைக்கு வராததால் பல்வேறு இடங்களிலும் ஆசிரியர்கள் தேடியதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த சிறுமி திறந்து வைக்கப்பட்டிருந்த பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கழிவுநீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி லியா லட்சுமியின் உடல், பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சிறுமி உடலுக்கு அஞ்சலி
பள்ளிக்கு பின்புறத்தில் மைதானத்திற்கு செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் தொட்டி மூடப்படாமல் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததாக பள்ளி நிர்வாகத்தினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து, பள்ளி முதல்வர் டொமினிக் மேரி உட்பட மூன்று பேர் கைது நேற்று (ஜன. 3) போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மாணவி லியா லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று மாணவியின் இறுதி அஞ்சலி நடைபெற இருக்கிறது.
மாணவியின் உடல் விக்கிரவாண்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் மல்க மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆகியோர் குழந்தையின் உடலுக்கு, மாலை அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.
மேலும் படிக்க | யார் அந்த சார்? விடை தேடும் போலீஸ்..அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விசாரணை அப்டேட்!
நிவாரணத்தை வழங்கிய அமைச்சர்...
இதனை தொடர்ந்து குழந்தையின் உறவினர்களிடம் அமைச்சர், சம்பவம் குறித்து விரிவாக கேட்டறிந்து ஆறுதல் கூறினார். பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும், குழந்தையின் உடல் அருகே கதறி அழுது கொண்டிருந்த தாயாரிடம் அமைச்சர் பொன்முடி, முதல்வர் அறிவித்த நிவாரணத்தொகையின் காசோலையை வழங்க முற்பட்டார். முதலில், அதனை சிறுமியின் தாயார் ஏற்க மறுத்து, நிவாரணத்தை நிராகரித்தார். மேலும், அந்த குழந்தையை நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் பெற்றதாக கூறி, மகளின் இறப்பை தாங்கிக்கொள்ள இயலாமல் கதறித் துடித்தார்.
தொடர்ந்து, பலரும் அவருக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர். இதை அடுத்து, தமிழக முதல்வர் அறிவித்த ரூபாய் மூன்று லட்சத்திற்கான காசோலையை குழந்தையின் பெற்றோர்களிடம் பொன்முடி வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி,"பள்ளியில் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
பள்ளி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த சிறுமியின் பாட்டி கூறுகையில்,"இறந்த மாணவியை பள்ளி நிர்வாகம் அனாதை போல் நடத்தியது. 11, 12 மணி அளவில் நடைபெற்ற விபத்தினை முறையாக பெற்றோருக்கு தெரிவிக்காமல் மறைக்கும் நோக்கத்தோடு நான்கு மணி அளவில் மாணவி அழைத்து செல்ல பள்ளிக்குச் சென்ற பொழுது அவர்களிடத்தில் மெத்தனமாக மாணவி கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்" என்றார்.
தொடர்ந்து, மாணவியின் மரணத்தை மறைக்கும் நோக்கத்தோடு பள்ளி நிர்வாகம் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டினார். அந்த தனியார் பள்ளி நிர்வாகம் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் கட்டணத்தை பெற்றுக்கொண்டு உரிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமித்து பராமரிக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.
பொதுமக்கள் கொந்தளிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் அரசு தரப்பில் உரிய ஆய்வு நடத்தி, இதுபோன்று ஒரு குழந்தை மீண்டும் உயிரிழக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் தமிழக அரசை கேட்டுக் கொண்டனர். மேலும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்த பகுதியினர் சிலர் கூறுகையில், தனியார் பள்ளியின் நோக்கம் கட்டணம் வசூலிப்பதில்தான இருக்கிறது என்றும் இது திட்டமிட்டு கொலையாக கருத வேண்டும் என்றும் கூறினர். மேலும், இந்த சம்பவத்திற்கு உடந்தையான அதிகாரிகளையும் இதில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கள்ளச்சாராயம் விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.10 லட்சம் அறிவித்த அரசு, தற்போது உயிரிழந்த பச்சிளம் குழந்தைக்கு மூன்று லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது ஏற்க முடியாது என்றும் சில தெரிவித்தனர். பள்ளி நிர்வாகத்திடம் மாணவியின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வாங்கி தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
மேலும் படிக்க | துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு! சிக்கிய முக்கிய ஆவணங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ