உடலில் சேரும் கொழுப்புக்கும் அதிக கொழுப்பு தான். நம்மை அண்டி பிழைக்கும் அது நமது பேச்சையே கேட்பதில்லை என்றால் கோபம் வராதா? ஆனால் நமது கோபத்தை பற்றி அது கண்டு கொள்ளாமல், நாளொரு வண்ணமும், பொழுதொறு இஞ்சுமாக வளர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. ம்.ம்... இதோ நமக்கு ஒருபோதும் மகிழ்ச்சியை கொடுக்காத தொப்பையின் சில வகைகள்...
தொப்பை விழுவதற்கும், எழுவதற்க்கும், வளர்வதற்கும் சிலபல காரணங்கள் இருந்தாலும், தொப்பையை குறைக்க வேண்டுமானால் அதற்கு சிற்சில காரணங்கள் மட்டுமே இருக்கும். செல்வம் சேர்ந்தால் குதூகலமாகும் நாம், தொப்பை வளர்ந்தால் மட்டும் சோகமாகிவிடுகிறோம். நம்மை, நமது வயிற்றை அண்டி வாழும் கொழுப்பு, தொப்பையாக சேர்ந்து படுத்தும் பாடு! அப்பப்பா சொல்ல மாளாது. தொப்பை பற்றி பேசினால், அனைவருக்கும் எதாவது ஒரு சொந்தக்கதை சோகக்கதை இல்லையில்லை, தொப்பைக்கதை இருக்கும். அவை அனைத்தையும் தெரிந்துக் கொள்ள முடியாது. எனவே, விதவிதமான தொந்திகளின் சிலவகை தொப்பைக் காட்சிகள்...
தாயாகும் பெண் மட்டுமே தனது வயிறு வளர்வதில், அது தொப்பையாவதில் மகிழ்ச்சியடைகிறாள். அது பெருமையின் அடையாளம்... பெருமிதத்தின் தோற்றப்பொலிவு. குடும்பமே ஒன்றாய் கூடி வயிறு வளர்வதை பார்த்து ரசித்து, அந்த வயிற்றுக்கு அருமையான உணவு கொடுத்து, கட்டிச்சோற்றை கட்டிப் போட்டு வயிற்றை வளர்ப்பார்கள். அதுவே, குழந்தை பிறந்ததும், பெருத்திருக்கும் வயிறு சிறுக்க தேவையான பிரம்மபிரயத்தனங்களையும் அதே பெண்கள் தான் செய்வார்கள். நமது தொப்பைக்கு காரணம் கொழுப்பாய் இருந்தால் வரும் அங்கலாய்ப்பு, வயிற்றுக்கு ரேஷன்.. உணவுக்கு தடா. அதுவே, தொப்பைக்குள் வளர்வது குழந்தை என்றால், வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் யார் விடப் போறாங்க!