இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது, முதியவர்களை விட இளைஞர்களை அதிகம் பாதிக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணம்.
இன்றைய அவசர உலகில், நாம் சரியான நேரத்தில் சாப்பிடாமலும், ஆரோக்கியமான உணவை தவிர்ப்பதாலும், சரியான நேரத்தில் தூங்காததாலும், பலவித உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது, மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது. இதய நரம்புகளில் கொழுப்பு சேர்ந்து, இதயத்திற்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது, மாரடைப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், டயட்டில் செய்யும் சில மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவை பெரிதும் கட்டுப்படுத்தும்.
சப்பாத்தி என்பது அனைவருக்கும் பிடித்த உணவு சப்பாத்தி செய்வதற்கு நம்மில் பெரும்பாலானோர் சப்பாத்தி செய்ய கோதுமை மாவை பயன்படுத்துகிறோம். அதற்கு பதிலாக சிறு தானியங்கள் மாவை பயன்படுத்தினால், கொலஸ்ட்ரால் மட்டுமின்றி உடல் பருமன், நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும். பிரச்சனைகள் இருந்தால் கட்டுப்படுத்தவும் முடியும்.
நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த சோள மாவு பசையம் (Sorghum Millet Flour) இல்லாத ஆரோக்கியமான மாற்று உணவாகும். இது கொலஸ்ட்ராலை எரித்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ரத்த சக்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும்.
குதிரைவாலி (Barnyard Millet) கொலஸ்ட்ராலுக்கு ஏற்ற சிறந்த உணவு. நார்ச்சத்து நிறைந்த குதிரைவாலி, செரிமானத்தை வலுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் உடல் பருமனை குறைக்க விரும்புபவர்களுக்கும் இது அருமருந்து எனலாம்.
கேழ்வரகை (Finger Millet) சிறுதானியங்களில் அரசி என்பார்கள். அந்த அளவிற்கு எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் இதில் நிறைந்துள்ளன. ஆக்சிஜனேற்றம் மற்றும் தாதுக்களின் வளமான மூலமாக இருக்கும் ராகி கெட்ட கொலஸ்ட்ராலை எதிர்த்து இதயத்தை பாதுகாக்கிறது.
இந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் சிறுதானியமான கம்பு (Bajra Millet) உணவில், புரதம் இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், தயாமின், ரிப்போ பிளேமின், நியாசின் மற்றும் பல வகையான வைட்டமின்கள் உள்ளன. கொலஸ்ட்ராலுக்கு மட்டுமின்றி நீரழிவை கட்டுப்படுத்தவும் இது பெரிதும் உதவுகிறது.
அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த திணை மாவு (Foxtail Millet) கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பை எரிப்பது மட்டுமின்றி, நீரழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும். உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்