MGNREGA Wages Revised : இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கூலி உயர்த்தப்பட்டது சர்ச்சைகளை எழுப்பினாலும், மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாளர்களுக்கு வழங்கும் சம்பளத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. எதிர்வரும் நிதியாண்டில் கூலி உயர்வு அமலுக்கு வரும்.
இதில், 2024-25 நிதியாண்டுக்கு தமிழகத்தில் ஊதியம் ரூ.319 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 8.5 சதவீத உயர்வு வழங்கப்பட்டதன் மூலம் இந்தத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.25 கூலி உயர்வு கிடைக்கும்
கூலி உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகின்றன. இந்தத் திட்டம் மூலம் நாடு முழுவதும் இருந்து 5.97 கோடி குடும்பங்கள் பயன் பெறுவது குறிப்பிடத்தக்கது
கூலி அதிகரிப்பு என்பது ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடுகிறது. 3 முதல் 10 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 8.5% கூலி அதிகரித்து, தமிழகத்தில் ஊதியம் ரூ.319 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
நாட்டில் தேர்தல் நடைபெறுவதையொட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது
திருத்தப்பட்ட ஊதிய உயர்வை அறிவிக்க தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்றுள்ளதாக ஊரக வளர்ச்சி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.