தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டது ஏன்...? முழு பின்னணி

Tamil Nadu Cabinet: தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து மூன்று அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் நீக்கப்பட்டதற்கான பின்னணி என்ன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம். 

  • Sep 29, 2024, 13:30 PM IST

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை 5ஆவது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த முறை 6 அமைச்சர்களின் இலாக்காகள் மாற்றப்பட்டுள்ளன. செந்தில் பாலாஜி, சா.மு. நாசர் உள்பட நான்கு பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மூன்று அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்த மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்ட பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.

 
 
 
 
 
1 /8

தமிழ்நாடு அமைச்சரவை 5ஆவது முறையாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு (Udhayanidhi Stalin) கூடுதல் இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டு, துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.   

2 /8

அதே நேரத்தில் சிறையில் இருந்து வெளிவந்த செந்தில்பாலாஜி (Senthil Balaji), கடந்தாண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட சா.மு. நாசர் (SM Nasar) ஆகியோருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது. மேலும் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் (Panaimarathupatty Rajendran), கோவி. செழியன் (Govi Chezhian) ஆகியோருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   

3 /8

புதிதாக பொறுப்பேற்கும் அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

4 /8

மேலும், அமைச்சரவையில் 6 பேருக்கு இலாக்காகள் மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பொன்முடி, மெய்யநாதன், கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோருக்கு இலாக்கா மாற்றமும், கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. 

5 /8

அதே சமயம், அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமசந்திரன் ஆகிய மூன்று அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதற்கான பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.   

6 /8

மனோ தங்கராஜ்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் அனுசரித்து போகாமல் இருப்பதாக மனோ தங்கராஜ் (Mano Thangaraj) மீது புகார்கள் இருந்ததாக கூறப்பட்டது. அவருக்கு கொடுக்கப்பட்ட பால்வளத்துறையை பொறுத்தவரை ஆவின் வளர்ச்சி என்பது எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதும் அவர் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.   

7 /8

செஞ்சி மஸ்தான்: இவரை பொறுத்தவரை பொன்முடியுடன் மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இவருக்கு கொடுக்கப்பட்ட துறையின் செயல்பாடுகளும் காரணமாக சொல்லப்படுகிறது. கட்சியிலும், அரசுப் பொறுப்புகளிலும் செஞ்சி மஸ்தான் (Senji Masthan) தனது குடும்பத்தினருக்கும் தனக்கு நெருக்கமானவருக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுவும் அவரது பதவி பறிப்புக்கு முக்கிய காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மரக்காணம் கள்ளச்சாரயம் விவகாரத்தில் இவருக்கு பெரிய கெட்ட பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.   

8 /8

ராமச்சந்திரன்: இவரை பொறுத்தவரை, முதலில் இவருக்கு வழங்கப்பட்ட வனத்துறையை மாற்றி சுற்றுலாத்துறை வழங்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை சுற்றுலா வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருந்த போதும் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை எனவும் சொல்லப்படுகிறது. நீலகிரியில் ராமசந்திரனின் (Ramachandran) குடும்பத்தினரின் ஆதிக்கமும் அதிகளவில் இருப்பதால் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவர் சார்ந்து இருக்கக்கூடிய சமுதாயத்துக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அவருக்கு தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா பதவி கொடுக்கப்பட்டுள்ளது.