லியோ திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.
ஒரு நாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது. லியோ படக்குழு தரப்பிலிருந்து அக்டோபர் 19 ஆம் தேதி அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கும், 20 ஆம் தேதியில் இருந்து 24 ஆம் தேதி வரை காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் கர்னல் கணேசன் நீதிபதி அனிதா சம்பத் முன்பு அவசர முறையீடு செய்தனர். லியோ படத்தை திரையிட காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான காட்சிக்கு அனுமதிக்க வேண்டும், அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக மதியம் 1 மணிக்கு விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.