'என்றும் நினைவில் நேசமணி' தனிமுத்திரை பதித்த இயக்குநர் சித்திக் - தமிழ் படங்கள் இதோ!

மலையாளம், தமிழ் திரையுலகில் பல்வேறு திரைபடங்களை இயக்கிய இயக்குநர் சித்திக் இன்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் ஒரு சில படங்களை மட்டுமே தமிழில் இயக்கியிருந்தாலும், பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் போன்ற படங்களுக்கு என்றும் தமிழ் ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு.

  • Aug 08, 2023, 23:39 PM IST

இயக்குநர் சித்திக் எடுத்த தமிழ் திரைப்படங்கள் குறித்தும், அதன் நகைச்சுவை காட்சிகள், கதாபாத்திரம் உள்ளிட்டவை குறித்து இப்புகைப்படத்தொகுப்பில் காணலாம்.

 

 

 

 

 

 

 

 

1 /7

பிரண்டஸ்: விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து 2001இல் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படம் தான் சித்திக்கின் முதல் தமிழ் திரைப்படமாகும். படம் பெருமளவு பேசப்பட்டாலும், அதில் வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரத்திற்கு தமிழ் சினிமாவின் திரைவரலாற்றில் நீங்கா இடம் உண்டு என்பதை மறுக்க முடியாது. சித்திக் படங்களில் தனிகரில்லா நகைச்சுவைக்கு உதாரணமான திரைப்படம் பிரண்ட்ஸ். இத்திரைப்படம் மலையாளத்திலும், பிரண்ட்ஸ் என்ற பெயரிலேயே 1999இல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

2 /7

எங்கள் அண்ணா: விஜய்காந்த், பிரபுதேவா, வடிவேலு, நமீதா உள்ளிட்டோர் நடிப்பில் 2004இல் வெளியான திரைப்படம் எங்கள் அண்ணா. இந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இதில் இடம்பெற்றிருந்த நகைச்சுவை காட்சிகளும் இன்றளவும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக வலம் வருகின்றன. SP என்ற பெயரில் விஜய்காந்த் நடிப்பில் மிரட்ட, மயில் என பெயரில் வடிவேலு மற்றொரு பக்கம் அசத்தியிருப்பார். பாண்டியராஜன், எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் வரும் காட்சிகளும் சிரிப்பலைகளை ஏற்படுத்தக்கூடியவை. இத்திரைப்படம், 2003இல் மலையாளத்தில் சித்திக்கால் எழுதி, இயக்கப்பட்ட Chronic Bachelor படத்தின் மறு ஆக்கம் ஆகும். 

3 /7

சாது மிரண்டா: பிரசன்னா, அப்பாஸ், காவ்யா மாதவன், கருனாஸ் ஆகியோர் நடித்து 2008ஆம் ஆண்டு வெளியான படம் சாது மிரண்டா. இப்படமும் பெரிய அளவில் ஓடாவிட்டாலும், நகைச்சுவை காட்சிகள் தனித்துவமாக இருக்கும். இத்திரைப்படமும் ஒரு மலையாள படத்தின் மறு ஆக்கம் தான். 

4 /7

காவலன்: 2011ஆம் ஆண்டு விஜய், அசின் ஆகியோரின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் காவலன். இத்திரைப்படம் விஜய் நீண்ட நாளுக்கு பின் ஆக்சனை குறைத்து, காதல் காட்சிகளில் அதிகம் நடித்த படமாக உருவாகி, நல்ல வெற்றியையும் பெற்றது. இதில், வடிவேலு - விஜய் ஆகியோரின் நகைச்சுவை கூட்டணியும் மக்கள் மனதில் எப்போதும் ரசிக்கத்தக்கவை. குறிப்பாக, அமாவாசை என்ற கதாபாத்திரத்தில் வடிவேலுவின் நடிப்பையும் யாராலும் ஈடு செய்ய முடியாது என்று சொன்னாலும், அது மிகையாகாது. இந்த திரைப்படம், சித்திக் இயக்கி, திலீப், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியான 'Bodyguard' படத்தின் மறு ஆக்கம் ஆகும்.  

5 /7

பாஸ்கர் ஒரு ராஸ்கல்: நீண்ட இடைவேளைக்கு பிறகு சித்திக், 2018இல் தமிழில் படம் ஒன்றை இயக்கினார். பாஸ்கர் ஒரு ராஸ்கல் என பெயரிடப்பட்ட அத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, அமலா பால் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2015இல் மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் ரீமேக்காகும். அந்த திரைப்படத்தையும் சித்திக் இயக்கியிருந்தார். இதுவே இவரின் கடைசி தமிழ் திரைப்படமாகும். 

6 /7

சித்திக், 2020இல் மோகன்லாலை வைத்து Big Brother என்ற திரைப்படத்தை இயக்கினார். அதுவே அவரின் கடைசி திரைப்படமாகவும் அமைந்தது. அவர் தமிழ், மலையாளம் மட்டுமின்றி இந்தி திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். மலையாளத்தில் அவர் எடுத்த Bodyguard என்ற திரைப்படத்தை இந்தியிலும் அதே பெயரில் அவரே இயக்கினார். அதுவே அவர் இயக்கிய ஒரே இந்தி படமாகும்.  

7 /7

63 வயதான சித்திக் கல்லீரல் நோயாலும், நிமோனியாவாலும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு நேற்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்றிரவு உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. இதனால், திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவர் உயிரிழந்தாலும், அவரின் திரைப்படங்கள், கதைமாந்தர்கள், கதைகள் ஆகியவற்றால் என்றுமே மக்களால் நினைவுக்கூரப்படுவார் என்பதில் ஐயமில்லை.