Safest way to Invest in Gold: இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. இப்போது தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனினும், தங்கம் வாங்கும் முறைகளில் கடந்த சில காலங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இணைய வழியில் தங்கத்தை வாங்கி சேமிப்பது (Digital Gold) தற்போது பலருக்கு எளிதான மற்றும் பாதுகாப்பான வழியாக இருக்கிறது. எனினும், பாரம்பரிய வழியில் தங்கத்தை வாங்கி தங்கள் வீடுகளிலோ, வங்கிகளிலோ வைத்திருப்பது நல்லதா? தங்கத்தை ஆவணமாக வைத்திருப்பது நல்லதா? டிஜிட்டல் தங்கமாக வைத்திருப்பதுதான் பாதுகாப்பானதா? இப்படி பல கேள்விகள் மக்கள் மனதில் உள்ளன. தங்கம் வாங்குவதில் உள்ள பல்வேறு வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இது டிஜிட்டல் வடிவத்தில் தூய தங்கத்தில் முதலீடு செய்ய உதவும் ஒரு கருவியாகும். விற்பனையாளர் பாதுகாக்கப்பட்ட பெட்டகங்களில் ஃபிசிக்கல் தங்கத்தை சேமித்து வைப்பார். கட்டண செயல்முறை நிறைவடைந்தவுடன், தங்கம் வாங்குபவருக்கு ஒரு இன்வாய்ஸ் கிடடைக்கும். சேவை வழங்குனரிடம் வாடிக்கையாளருக்கு உள்ள வால்ட் பாலன்ஸில், எவ்வளவு தங்கம் கணக்கில் உள்ளது என்பது குறித்த விவரம் இருக்கும். இதற்கான இன்வாய்சும் வழங்கப்படும்.
இந்தியாவில், டிஜிட்டல் தங்கம் முதன்மையாக மூன்று நிறுவனங்களால் விற்கப்படுகிறது - MMTC PAMP, Augmont Goldtech மற்றும் Digital Gold India (SafeGold). இந்த நிறுவனங்கள் PayTM, Google Pay, Amazon Pay மற்றும் PhonePe போன்ற சேவை வழங்குனர்களுடன் இணைந்து, டிஜிட்டல் தங்கத்தை தங்கள் தளங்கள் வழியாக விற்கின்றன. சமீபத்தில், தனிஷ்க், சென்கோ மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் போன்ற நகைக்கடைக்காரர்களும் இதே போன்ற டை-அப் மூலம் டிஜிட்டல் தங்கத்தை வழங்கத் தொடங்கினர். வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் தங்கக் கணக்குகளை ரிஃபைனருடன் நேரடியாகவோ அல்லது எந்தவொரு பார்ட்னர் தளங்கள் மூலமாகவோ திறக்கலாம்.
டிஜிட்டல் தங்கம், பாதுகாப்பான இடத்தையோ அல்லது வங்கி லாக்கரையோ சொந்தமாக வைத்திருக்காமல் தங்கத்தை வைத்திருக்க உதவுகிறது. ஆகையால், டிஜிட்டல் தங்கத்தில் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. டிஜிட்டல் தங்க முதலீடு சான்றளிக்கப்பட்ட 24 காரட், 999.9 தூய தங்கத்தில் செய்யப்படுகின்றது. ஃபிசிக்கல் தங்கத்தில், கலப்படம், செய்கூலி ஆகிய பிரச்சனைகளும் வருவதுண்டு. டிஜிட்டல் தங்கக் கணக்கில், வாடிக்கையாளருக்கு 3% ஜிஎஸ்டியைத் தவிர எந்த செலவும் இருக்காது. இந்தியா முழுவதும் டிஜிட்டல் தங்கத்தின் விலை ஒரே மாதிரியாக உள்ளது. ஆகையால், நீங்கள் ஆன்லைனில் தங்கத்தை வெளிப்படையான முறையில் நேரடி சந்தை விலையில் வாங்கலாம், விற்கலாம். நீங்கள் எந்த வித கழிப்புகளும் இல்லாமல், எப்போது வேண்டுமானாலும் உங்கள் தங்கத்தை டிஜிட்டல் முறையில் விற்கலாம்.
தற்போது, டிஜிட்டல் தங்கம் நேரடியாக எந்த ஒழுங்குமுறை அமைப்பின் கீழும் இல்லை. ஆகையால், இந்த புதிய வழிமுறையை நிர்வகிக்க விதிகள் இன்னும் அமலில் இல்லாததால் அபாயத்தின் ஒரு கூறும் இதில் உள்ளது. எனினும், இந்த வகையில் தங்கத்தை சேமிக்கும் முறை அதிகரித்து வருவதால், டிஜிட்டல் பெட்டகங்களில் சேமிக்கப்படும் தங்கத்தின் அளவும் வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், டிஜிட்டல் தங்கத்திற்கான விதிமுறைகளை செபி (Sebi) விரைவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.