தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் அனைத்து வகையான மருந்துகள், வைட்டமின்கள், சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு புறம், கொரோனா நோய்த்தொற்றின் அச்சம் இருக்க, மறுபுறன், வழக்கமாக இருக்கும் நோய்களின் அபாயமும் வேகமாக அதிகரித்துள்ளது. மாறிவரும் பருவநிலை காரணமாக, மக்கள் சளி, காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனினும், சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை எளிதாக அதிகரிக்க முடியும். அத்தகைய சில முக்கிய வீட்டு வைத்தியங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. காலையில் நெல்லிக்காய் சட்னி சாப்பிடுவதன் மூலம், குடும்பத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். பலர் நெல்லிக்காயை தேனுடன் செர்த்து சாப்பிடுவார்கள். நெல்லிக்காய் அனைத்து வடிவங்களிலும் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.
துளசி ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் செடியாகும். துளசி கஷாயத்துடன் நாளை துவக்கினால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டையும் பல வித மருத்துவ குணங்கள் கொண்டவை. இவை பருவகால நோய்களில் இருந்து காக்கும். துளசியுடன், தேன் மற்றும் கருப்பு மிளகும் கலந்து சாப்பிடலாம்.
பேரீச்சம்பழம் பல மருத்துவ குணங்கள் நிறைந்த உலர் பழமாகும். இதை இரவு முழுவதும் பாலில் ஊறவைக்கவும். அதன் பிறகு, காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்கள். இதனால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது தவிர, இரவில் ஊறவைத்த பாதாம் மற்றும் பேரிச்சம் பழத்தை ஒன்றாக பாலில் போட்டு மிக்ஸியில் அரைத்து உட்கொள்ளலாம். முக்கியமாக, இது குழந்தைகளுக்கும் நன்மை பயக்கும்.
உலர் திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களுடன் பொட்டாசியம், பீட்டா கரோட்டின், கால்சியம் போன்ற வைட்டமின்களும் உள்ளன. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எலும்புகளை வலுவாக வைக்கிறது.