Parenting Tips Tamil : பல குழந்தைகள், வளரும் போது தன்னை சுற்றி எந்த நண்பர்களும் இன்றி வளருவர். அப்படி, தோழர்கள் இன்றி வளரும் குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி கையாள்வது? இதோ டிப்ஸ்!
Parenting Tips Tamil : ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு குணாதிசயத்துடன் வளர்வர். சில சமயங்களில் பல குழந்தைகளுக்கு அவர்களுடன் விளையாடவோ உட்கார்ந்து பேசவோ நண்பர்கள் கிடைப்பதில்லை. அப்படி, நண்பர்கள் அமையாமல் தனிமையில் வாடும் குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் பார்த்து கையாள வேண்டும். அவர்களுக்கான டிப்ஸ், இதோ!
சரியான நண்பர்களை தேர்வு செய்வதும், அவர்களுடன் இருப்பதும் அனைத்து வயதினருக்கும் முக்கியமானதாகும். நல்ல நட்பு வட்டாரம் நமக்குள் சுய மரியாதையையும் சுய ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கி கொடுக்கும். சிறு வயதில் நமக்கு கிடைக்கும் நண்பர்களுடன் பல சமயங்களில் தொடர்பில் இல்லாமல் போயிருப்போம். ஆனால் எப்போது நினைத்து பார்த்தாலும் அவர்களுடன் பழகிய நினைவுகள் பசுமரத்தாணி போல் பதிந்து போயிருக்கும். ஆனால், கொரோனா காலத்திற்கு பிறகு ஒரு சில குழந்தைகள், நண்பர்கள் இல்லாமல் வளர்கின்றனர்.
உங்கள் குழந்தைகள் தனிமையில் இருப்பதாக உணர்ந்தால் அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். முடிந்தால், பிற குழந்தைகளின் பெற்றோர்களிடம் உங்கள் குழந்தையுடன் விளையாடுமாறு கேட்கலாம்.
உங்கள் குழந்தையிடம் மனம் விட்டு பேசுவதும் மிகவும் முக்கியமாகும். இதனால் அவர்களிடம் என்ன பிரச்சனை உள்ளது என்பது பெற்றோர்களுக்கு தெரிய வரும். உங்கள் குழந்தையால் பிற குழந்தைகளிடம் சென்று பேச முடியவில்லையா, அல்லது பிற குழந்தைகள் உங்கள் குழந்தையிடம் முரட்டுத்தனமாக மனம் புண்படும்படி நடந்து கொண்டனரா என்பது குறித்து பேசலாம்.
உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கை வளரும் செயல்களில் அவர்களை ஈடுபட வைக்கலாம். அவர்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைப்பது, அவர்களிடம் ஏதேனும் ஒரு முடிவை எடுக்க சொல்வது என அவர்களை முக்கியமாக உணர வைக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்.
பள்ளியில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்ள உங்கள் குழந்தைகளை ஊக்குவிக்கலாம். அதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு நண்பர்கள் கிடைக்கலாம்.
பிற குழந்தைகளுக்கு நண்பர்கள் இருக்கும் போது உங்கள் குழந்தைக்கு நண்பர்கள் இல்லை என்றால், உங்கள் குழந்தை கண்டிப்பாக நெகடிவாக எதையாவது யோசிக்கும். அந்த சமயத்தில் அவர்களுக்கு பக்கதுணையாக இருக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பாகும்.
குழந்தைகள், தங்களின் பெற்றோர்கள் எப்படி இருக்கிறார்களோ அதை பார்த்துதான் வளர்கின்றனர். அதனால், நீங்கள் அவர்கள் பெருமைப்படும் வகையிலான விஷயங்களை செய்ய வேண்டும். அவர்களுக்கு முன்னுதாரணமாக உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். வேறு நண்பர்கள் இல்லை என்றாலும் நீங்கள் அவர்களுக்கு நல்ல நண்பனாக இருக்கலாம்.