Manmohan Singh Blue Color Turban: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடைசி வரை நீல நிற தலைப்பாகை அணிந்திருந்ததற்கு ஏதும் பின்னணி இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலை இங்கு காணலாம்.
மன்மோகன் சிங் (Manmohan Singh) அவரது 92ஆவது வயதில் நேற்று காலமானார். அவரது உடல் தற்போது டெல்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் (92) நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மன்மோகன் சிங் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபல, மக்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் 7 நாள்களுக்கு (ஜன. 1 வரை) துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், அவரது உடலுக்கு நாளை (டிச.28) அரசு மரியாதை உடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். அதேபோல், வெளிநாட்டில் இருக்கும் இந்திய தூதரகங்களிலும் இந்திய தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். இந்த காலகட்டங்களில் அரசு சார்பில் எவ்வித பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் (Manmohan Singh) உடல் தற்போது அவரது டெல்லி இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை டெல்லியில் இறுதிச் சடங்கும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (UPA) ஆட்சியில் பிரதமராக செயலாற்றினார். இவரின் ஆட்சிக்காலத்தில் இந்திய பொருளாதாரம் புத்துணர்ச்சி பெற்று, வளர்ச்சிப் பாதையில் சென்றது. 10 ஆண்டு காலமும் தேர்தலில் போட்டியிடாமல், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தே பிரதமர் பொறுப்பை வகித்துவந்தது இவர் மட்டுமே.
முன்னதாக, 1991-1996 காலகட்டத்தில் மத்திய நிதி அமைச்சராக மன்மோகன் சிங்க செயல்பட்டார். 1998ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக செயலாற்றினார். தன்னை பலரும் விபத்தில் பிரதமர் பதவியை பெற்றதாக விமர்சிக்கின்றனர், ஆனால் ஒரு நான் மத்திய நிதி அமைச்சர் ஆனதே ஒரு விபத்துதான் என மன்மோகன் சிங் ஒருமுறை வேடிக்கையாக சொன்னது இங்கு குறிப்பிடத்தக்கது.
நிதி அமைச்சக தலைமை பொருளாதார ஆலோசகர், மத்திய நிதித்துறை செயலர், திட்டக்குழுவின் துணை தலைவர், தெற்கு பொதுக்குழு செயலர், மத்திய பொதுக்குழு செயலர், யூஜிசி தலைவர் உள்ளிட்ட அரசுப் பதவிகளை வகித்து வந்தார். ரிசர்வ் வங்கியின் இயக்குநராகவும், கவர்னராகவும் அவர் பணியாற்றினார்.
பஞ்சாப் மாநிலத்தில் இளங்கலை, முதுகலை பட்டங்களை பெற்ற மன்மோகன் சிங் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதல் வகுப்பு ஹானர்ஸ் பட்டம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தின் Nuffield கல்லூரியில் DPhil பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார். பல்வேறு பல்கலைகழகங்களில் அவர் விரிவுரையாளர், கௌரவ பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
அந்த வகையில், எப்போதும் மன்மோகன் சிங் நீல நிற தலைப்பாகை (டர்பன்) மட்டுமே அணிந்திருப்பார் என்பதால் அதற்கு ஏதும் பின்னணி இருக்கிறதா என அவரிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு அவர்,"நான் கேம்பிரிட்ஜில் படிக்கும் போது நீல நிற தலைப்பாகை அணிந்திருப்பேன் (Manmohan Singh Blue Color Turban). இதன் காரணமாக, எனது நண்பர்கள் 'புளூ டர்பன்' என்று பட்டைப்பெயர் வைத்து என்னை அழைப்பார்கள். நீல நிறத் தலைப்பாகை அணிவதற்குப் பின்னால் எவ்வித குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. எனக்கு நீல நிறம் மிகவும் பிடிக்கும்" என்றார். அவர் கடைசி வரை பொது இடங்களில் நீல நிற டர்பன் அணிந்தே மன்மோகன் சிங் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.