ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூருஅணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாகா, கப்தில் களமிறங்கினர். இவர்கள் தொடக்கம் முதலே அடித்து ஆட தொடங்கினர். அணியின் ஸ்கோர் 46 என்ற இருந்த நிலையில், சாகா 20 ரன்னில் சாய்னி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து, கப்தில் (30 ரன்) , மனிஷ் பாண்டே (9 ரன்) ஆகியோரின் விக்கெட்டை ஒரே ஓவரில் வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர். பின்னர் வில்லியம்சன் களமிறங்கினார்.
இதன்பிறகு, வில்லியம்சனும், விஜய் சங்கரும் அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், விஜய் சங்கரை வாஷிங்டன் சுந்தர் தூக்கினார். பிறகு வந்த யூசுப் பதான் 3, நபி 4, ரஷீத் கான் 1 ரன் என வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்கள். 19 ஓவருக்கு அணியின் ஸ்கோர் 147 ஆக இருந்த நிலையில், 20-வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் பந்துகளை ஓன் மேன் ஆர்மியாக ஆடி வந்த வில்லியம்சன் ”சிக்ஸ், ஃபோர், சிக்ஸ், ஃபோர்” என பொளந்து கட்டினார். அந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் எடுக்கப்பட்டது.
20 ஓவர்களின் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் அடித்து, பெங்களூரு அணிக்கு வெற்றி இலக்காக 176 ரன்களை நிர்ணயித்தது. பின்னர் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய விராட் கோலி 16 ரன்களுடனும்ட, பர்திவ் படேல் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். இதனையடுத்து டிவில்லியர்ஸ், ஷிம்ரான் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்திருந்தது.
இறுதியில் 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.