வெலிங்டன்: இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய பேட்ஸ்மேன்களின் தோல்வி தொடர்ந்தது, பேசின் ரிசர்வ் மைதானத்தில் (Basin Reserve) விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றது. உலகின் சிறந்த அணி மற்றும் அனைத்து விதமான மைதானங்களிலும் சிறப்பாக ஆடக்கூடிய சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறிக்கொண்டு இருந்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தலைமையிலான இந்திய அணி, இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் 356 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா வெறும் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதேநேரத்தில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 348 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 183 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்கள் எழுச்சி பெறுவார்கள் என நினைத்திருந்த வேளையில், இந்திய பேட்ஸ்மேன்கள் தோல்வியடைந்தனர். ஆம் அவர்கள் இரண்டாவது இன்னிங்சில் 191 ரன்களுக்கு அனைவரும் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து வெற்றி பெற வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே இலக்காக கொடுக்கப்பட்டது. இதனால் அந்த அணி எந்த விக்கெட்டுகளையும் இழக்காமல் வென்றது. டாம் லாதம் (Tom Latham) ஆட்டமிழக்காமல் ஏழு ரன்களும், டாம் பிளண்டில் (Tom Blundell) இரண்டு ரன்களும் எடுத்தனர். இது நியூசிலாந்தின் 100 வது டெஸ்ட் வெற்றியாகும்.
இரண்டு இன்னிங்சில் மாயங்க் அகர்வால் (Mayank Agarwal) மட்டுமே 2 வது இன்னிங்சில் அசைசதம் 58(99) ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் அரைசதம் கூட அடிக்க முடியவில்லை. இந்த டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் டிரா செய்ய அருமையான வாய்ப்பு உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றால், தொடர் சமமாக முடியும். ஒருவேளை 2வது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தால், நியூசிலாந்து அணி தொடரை வெல்லும்.
அடுத்த மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.