தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டை யுகாதி என்று கூறுவர். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். யுகத்தின் ஆரம்பத்தை யுகாதி என அழைக்கப்படுகிறது.
தெலுங்கு வருடப்பிறப்பு எந்த தினத்தில் வருகிறதோ அந்த தினத்தின் கிரகம் அந்த வருடத்தின் ராஜாவாக அமைவார். இந்த வருடம் யுகாதி ஜோதிட நாளான செவ்வாயன்றே பிறந்துவிடுவதால் ஹேவிளம்பி வருடத்தின் ராஜாவாக செவ்வாய் பகவான் அமைந்துள்ளார்.
அதே போன்று சித்திரை மாதம் பிறக்கும் நாளின் அதிபதியே அந்த வருடத்தின் மந்திரியாகும். அவ்வாறே குரு பகவான் ஹேவிளம்பி வருட மந்திரியாவார். வரும் ஹேவிளம்பி வருடம் வீரமுள்ள ராஜாவும் விவேகமுள்ள மந்திரியும் இணைந்து ஆளப்போகும் குரு மங்கள யோகம் நிறைந்த அற்புத வருடமாகும்.
பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் உகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த உகாதி பண்டிகை உணர்த்துகிறது.
சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது.
இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது.
யுகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்.