பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் கடந்த 18 நாட்களாக நடைப்பெற்று வந்த மீட்பு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, மீட்பு பணியில் ஈடுபட்ட முப்படை வீரர்களுக்கும் முதல்வர் பினராயி விஜயன் பிரியா விடையளித்தார்!
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 லட்சம் பேர் மீட்கப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தற்போது மழை நின்றுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் பாதிப்படைந்த கேராளாவினை மீட்டெடுக்க மாநில அரசுடன் இணைந்து உதவிய ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.
வெள்ளம் சூழ்ந்து வீடுகளில் சிக்கித் தவித்த பல்லாயிரம் கணக்கானோரை முப்படை வீரர்கள் உயிரை பணையம் வைத்து மீட்டனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரணப் பொருட்களும், உணவுகளும் வழங்கி காப்பாற்றினர்.
#Thiruvananthapuram: Kerala CM Pinarayi Vijayan thanked the armed forces in a thanksgiving ceremony for successfully conducting rescue operations during #KeralaFloods earlier today. pic.twitter.com/WaGxAqYFT8
— ANI (@ANI) August 26, 2018
மீட்பு பணியின் ஒரு பகுதியாக ஒரு வீட்டின் மாடியின் மீது ஹெலிகாப்டரை இறக்கி, ஒரே ஆப்ரேஷனில் 26 பேரை விமானப்படை வீரர்கள் மீட்டது அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்தல், உணவுப் பொட்டலங்களை வழங்குதல், மருந்துகளை வழங்குதல் போன்ற பணிகளிலும் விமானப்படையினர் சிறப்பாகச் செயல்பட்டனர்.
மீட்பு பணியில் உதவியது மட்டுமின்றி விமானப்படையின் சார்பில் முதல்வரை நேரில் சந்தித்து 20 கோடி ரூபாய் நிவாரண நிதியும் வழங்கினர்.
இந்நிலையில் கடந்த 18 நாட்களாக நடைப்பெற்று வந்த மீட்பு பணி தற்போது முடிவடைந்ததை அடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த முப்படையைச் சேர்ந்த வீரர்களும் இன்று விடைப் பெற்றுக் கொண்டனர்.
மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட முப்படை வீரர்களையும் கேரள முதல்வர் பாராட்டி பிரியா விடையளித்தார்.