அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான கேள்வித்தாள் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார். அப்போது அவர்:
மருத்துவ படிப்புக்கான நுழைவு மற்றும் தகுதி தேர்வான நீட் தேர்வால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிராந்திய மொழிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதனால் நீட் தேர்வு எழுத அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே அடுத்த ஆண்டு முதல் இந்த பிரச்னைகள் நீங்கப்படும்.
பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதுபவர்களுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு ஒரே கேள்வித்தாள் வழங்கப்படும்.
அதேபோல் ஒரே தேசம் ஒரே தேர்வு என்ற கொள்கையின் அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இவ்வாறு கூறினார்.