கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்!
கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் இருந்து இதுவரை 439 நிவாரண முகாம்களில் 53,501 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இடுக்கி மாவட்டம் மற்றும் மலைப்பாங்கான இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோழிக்கோடு மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றுவதற்காக இராணுவம் சிறிய பாலங்களைக் கட்டி வருகின்றன.
வெள்ள அபாயம் மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் என்.டி.ஆர்.எஃப் ஆகியவை ஈடுபட்டுள்ளன என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம் உட்பட பகுதிகளில் பார்வையிட்டு மீட்பு பணிகளை குறித்து ஆராய்ந்து கேட்டறிந்தார்.
Kerala: Home Minister Rajnath Singh conducts aerial survey of the flood affected regions of the state. CM Pinarayi Vijayan and Union Minister KJ Alphons are also with him. pic.twitter.com/gT1Tv3sheL
— ANI (@ANI) August 12, 2018
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள அரசுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநில அரசுகளும் நிவாரண உதவி தொகையை வழங்கி உள்ளன.
இந்நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் உதவியுடன் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர் KJ அல்போன்ஸ் ஆகியோரும் உடன் இருந்தனர்!