புதுடெல்லி: நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெங்காய விலைக்கு பதுக்கி வைத்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது. அப்படி வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு மத்திய உணவு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எங்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும், காய்கறிகளை பதுக்கி வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார். அதே நேரத்தில், பல மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் பெருக்கமும் வெங்காயத்தின் விலைக்கு ஒரு காரணம் என்று அவர் மேற்கோள் காட்டினார்.
ராம் விலாஸ் பாஸ்வான் கூறுகையில், "நாட்டின் ஒரு அமைச்சராக விவசாயிகளையும் நுகர்வோரையும் கவனித்துக் கொள்ளவது எனது கடமை ஆகும். செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் மிகவும் ஆபத்தானது. இந்த மூன்று மாதங்களில், ஒவ்வொரு ஆண்டும் காய்கறிகளின் விலை அதிகரிக்கிறது. பல மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் போக்குவரத்து பிரச்சினையும் ஏற்பட்டு உள்ளது என்றார்.
மத்திய அரசிடம் 50,000 டன் வெங்காயம் இருப்பு உள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் கூறினார். அதில் 15,000 டன் வெங்காயம் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. எங்களிடம் இன்னும் 30,000 டன் வெங்காயம் உள்ளது. அனைத்து மாநில அரசுகளிடம் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், மத்திய அரசு இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை எடுத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யலாம் என்றும் ஏற்கனவே தெரிவித்துள்ளோம் என்று அவர் கூறினார்.