குடியரசு தலைவர், துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மட்டுமே சிவப்பு சுழல்விளக்கு பொறுத்த அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு ஏப்ரல் 19-ம் தேதி தெரிவித்துள்ளது. மேலும் விஐபி-களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி, மத்தியில் நடைபெறும் ஆட்சி சாமான்ய மக்களுக்கான அரசு என்பதை உணர்த்தும் வகையில் வரும் மே மாதம் முதல் தேதியில் இருந்து பிரதமர், மத்திய மந்திரிகள் உள்ளிட்டோரின் கார்களில் இருந்து சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றப்படும் என அறிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
அரசின் இந்த முடிவையடுத்து, மத்திய மந்திரிகள், மாநில முதல்வர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் வி.ஐ.பி.க்கள் தங்கள் வாகனங்களில் பொருத்தப்பட்ட சிவப்பு சுழலும் விளக்குகளை அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் முதல் மந்திரி சித்தராமையா, உத்தரவு எப்போது அமலுக்கு வருகிறதோ அப்போதுதான் சிவப்பு சுழல் விளக்கை அகற்றுவேன் என கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “இப்போது நான் ஏன் சிகப்பு சுழல் விளக்கை அகற்ற வேண்டும்? மே மாதம் எனது காரிலிருந்து சிகப்பு சுழல் விளக்கு அகற்றப்படும். உத்தரவு எப்போது அமலுக்கு வருகிறதோ அப்போதுதான் அகற்றுவேன்,” என கூறியுள்ளார்.