நடிகர் சங்கத்தின் துணை தலைவராக இருக்கும் நடிகர் பொன்வண்ணன், தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக கடந்த டிசம்பர் 10-ம் தேதி கடிதம் கொடுத்து இருந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என இரண்டு பதவிகளை வகித்து வருகிறார் விஷால். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் அவருடைய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் பொன்வண்ணன் தனது ராஜினாமாவுக்கான காரணத்தை கடிதமாக எழுதி நடிகர் சங்கத்தின் தலைவர் நாசருக்கு அனுப்பி வைத்தார்.
கடந்த டிசம்பர் 11 அன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொன்வண்ணன் கொடுத்த ராஜினாமா கடிதம் பற்றி இந்த சிறப்பு செயற்குழுவில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அவருடைய உணர்வுகளை மதிக்கும் வகையில் கருத்துகளை பதிவு செய்து ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என்று தீர்மானித்து அவருடைய பணி மேலும் தொடரும் வகையில் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள அவகாசமும் கொடுக்கிறது.
பொதுச்செயலாளர் விஷால் தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கியும், சங்கத்தின் சட்ட விதிகளுக்கு புறம்பாக எதையும் தான் செய்யவில்லை என்றும் இம்மாதிரி சங்கடங்கள் உருவாகும் சூழலை தான் உட்பட சங்கத்தில் எவரும் உண்டாக்கக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்
இவ்வாறு நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது நடிகர் சங்கத்துணைத்தலைவராக தொடர்ந்து செயல்படுவேன் என நடிகர் பொன்வண்ணன் கூறியுள்ளார். மேலும் நடிகர் சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடிகர் பொன்வண்ணன் ராஜினாமாவை திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது.