தற்போதைய காலகட்டத்தில், துரித கதியிலான வாழ்க்கை முறை, மோசமான் ஔணவு பழக்கம் காரணமாக, பெரும்பாலானோர் பல வகையான நோய்களுக்கு இரையாகி வரும் நிலையில், ஆரோக்கியமான உணவுகளின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
உணவுக்கும் ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளது. சில உணவுகளை பச்சையாக சாப்பிடுவது பலன் அளிக்கும். சிலவற்றை வேகவைத்தும் சாப்பிடுவது பலன் அளிக்கும். சில உணவுகளை வேக வைத்து சாப்பிடுவதால், அதன் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிப்பதோடு, செரிமானமும் எளிதாகும்.
உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துகள் மிக அவசியம். நாம் உண்ணும் உணவில் இருந்து நமக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. உணவுகளில் இருந்து அதிகபட்ச ஊட்டசத்துக்களை பெற, அதனை சரியான முறையில் சாப்பிட வேண்டும். அந்த வகையில், சில குறிப்பிட்ட காய்கறிகளையும் உணவுகளையும் வேக வைத்து சாப்பிடும் போது, அதன் ஊட்டச்சத்துகள் அதிகமாகும்.
கேரட் பீட்டா-கெரோடீன் நிறைந்த உணவு. பொட்டாசியம், விட்டமின் A , பையோடின், விட்டமின் B6, விட்டமின் K1 போன்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதனை வேக வைக்கும் போது, இதில் உள்ள பீட்டா-கெரோடீன் அதிகமாகும். இதன்மூலம் கண் பார்வை கூர்மைக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகமாகும்.
ப்ரோக்கோலியை வேகவைக்கும் போது அதில் உள்ள கரோட்டினாய்டுகள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் போன்ற ஆரோக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட்களை உடல் நன்றாக கிரகித்துக் கொள்ளும். இது தவிர இதன் சுவையும் அதிகரிப்பதால், சாப்பிடுவதும் எளிது.
கீரை போன்ற பச்சைக் காய்கறிகளை வேகவைக்கும்போது, அவற்றில் உள்ள ஆக்சலேட்டுகளின் அளவு குறையும். ஆக்சலேட் என்பது சில தாவர மற்றும் விலங்கு உணவுகளில் காணபடும் கரிம கலவை. இது சிறுநீரக கல் அபாயத்தை அதிகரிக்கிறது. இது தவிர, இவற்றை வேக வைக்கும் போது, இதில் இரும்பு மற்றும் பிற தாதுக்களின் அளவு அதிகரிக்கிறது.
சர்க்கரை வள்ளிக் கிழங்கில் புரதச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச் சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை வேகவைத்து சாப்பிடும்போது இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகமாகும்.
முளை கட்டிய தானியங்கள்: முளை கட்டிய தானிய வகைகளை வேக வைக்கும்போது, அவை எளிதில் ஜீரணமாகிறது. இவற்றை வேக வைப்பதால் இதில் நிறைந்திருக்கும் உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் நார்ச்சத்துகளை உடல் எளிதில் உறிஞ்ச முடியும். அதோடு உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
முட்டையை பச்சையாக சாப்பிடுவதை விட வேக வைப்பது சிறந்தது. வேகவைத்த முட்டை புரதத்தின் சிறந்த மூலமாகும். வேகவைத்த முட்டைகள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன, மேலும் அவை ஜீரணிக்க எளிதாகின்றன. ஆரோக்கியமான காலை உணவாக இதனை தேர்வு செய்யலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.