இந்தியாவில் உயர் ரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. பெரும்பாலும், உணவுப்பழக்கங்களால், உயர் ரத்த அழுத்த பிரச்சனை அதிகமாகின்றது. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் ஆய்வில், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க தயிர் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதாவது ஒருவர் உயர் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால், அவரது தினசரி உணவில் தயிரை சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர் டென்ஷன் ஆகியவை இன்று உலகம் முழுவதும் பொதுவான பிரச்சனையாகிவிட்டன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டின் துவக்கத்தில் உலகில் 30 முதல் 79 வயதுடைய சுமார் 1.28 பில்லியன் மக்கள் இந்தப் பிரச்சனையின் பிடியில் உள்ளனர்.
டாக்டர் அலெக்ஸாண்ட்ரா வேட் கூறுகையில், 'பால் பொருட்கள், குறிப்பாக தயிர் இரத்த அழுத்தத்தை சாதாரணமாக கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ஏனெனில் இதில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தயிர் சாப்பிட்டால் அவர்களின் இரத்த அழுத்தத்தில் சுமார் ஏழு புள்ளிகள் வரை குறைகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.' என்றார்.
தயிர் சாப்பிடுவது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு நன்மை பயக்கும். அனைத்து பால் பொருட்களும் நமக்கு நல்லது என்று கூறப்பட்டாலும், தயிரில் அதிக அளவில் காணப்படும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்துகிறது.
தயிர் அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்ற உணவு. தயிர் சிறந்த புரோபயாடோயிக் உணவுகளில் ஒன்றாகும். புரோபயாடிக் உணவுகள், தொற்று நோயை எதிர்த்து போராடும், ரத்தத்தின் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.
தயிர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தயிர் சருமத்திற்கும் தலைமுடிக்கும் அழகூட்டும் மருந்து பொருளாகவும் பயன்படுகிறது. தயிர் எடையை குறைக்க உதவுகிறது. தயிர் உட்கொள்வது உங்களை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)