Nirmala Sitharaman ; 2024 -25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கும் நிர்மலா சீதாராமன், பொருளாதாரம் படித்தவர். அவரின் ஆரம்ப கல்வி, மேற்படிப்பு, அரசியல் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வோம்.
Nirmala Sitharaman Latest News : இந்தியாவின் நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 2024 -25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்த 7வது மத்திய பட்ஜெட் இது.
தொடர்ச்சியாக 6 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் சாதனையையும் நிர்மலா சீதாராமன் முறியடித்துள்ளார். இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் நிர்மலா சீதாராமன் கல்வித் தகுதி, அவர் அரசியலில் நுழைந்தது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்.
நிர்மலா சீதாராமன் ஆரம்ப கல்வி ; நிர்மலா சீதாராமன் பூர்வீகம் மதுரை. இவரது தந்தை நாராயணன் இந்தியன் ரயில்வேயில் பணிபுரிந்தார். 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி மதுரையில் பிறந்த நிர்மலா சீதாராமன், ஆரம்ப கல்வியை விழுப்புரத்தில் உள்ள சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கினார். அப்போதே பொருளாதாரம், சமூக அறிவியலில் கவனம் செலுத்தினார் நிர்மலா சீதாராமன்.
நிர்மலா சீதாராமனின் மேல்படிப்பு ; திருச்சிராப்பள்ளியில் உள்ள சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் படித்த நிர்மலா சீதாராமன் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
அதன்பின் டெல்லி சென்ற அவர் அங்குள்ள புகழ்பெற்ற கல்லூரியான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) எம்ஏ பொருளாதாரத்தில் சேர்ந்தார். அதனை முடித்து அங்கேயே பொருளாதாரத்தில் எம்பில் முடித்து, பிஎச்டியும் சேர்ந்தார்.
இந்தோ - ஐரோப்பிய ஜவுளி வர்த்தகம் தொடர்பாக ஆய்வு செய்த நிர்மலா சீதாராமன், திருமணமானதால் பிஎச்டி படிப்பை பாதியிலேயே கைவிட்டு கணவருடன் லண்டன் சென்றார். அங்கேயே சில ஆண்டுகள் இருந்தார்.
நிர்மலா சீதாராமன் அரசியல் பயணம் ; 2008 ஆம் ஆண்டு தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்ட நிர்மலா சீதாராமன், செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போதைய காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வலிமையான குற்றச்சாட்டுகளை செய்தியாளர் சந்திப்பில் முன்வைத்தார்.
2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்ததும் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் நன்மதிப்பை பெற்றிருந்ததால் அமைச்சரவையில் இவருக்கு அடுத்தடுத்த முன்னேற்றங்கள் இருந்தது.
2017 ஆம் ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்திய வரலாற்றிலேயே பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற இரண்டாவது பெண் இவர் தான். 2019 ஆம் ஆண்டு முதல் நிதியமைச்சராக இருக்கிறார்.