Kids Laziness Tips: குழந்தைகள் பலர், சோம்பேறி குழந்தகளாக இருப்பர். இவர்களை ஆக்டிவாக மாற்றுவது எப்படி? இதோ சில டிப்ஸ்.
Kids Laziness Tips: ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பதும், எதையாவது கேட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பதும்தான் பெரும்பாலான குழந்தைகளின் குணாதிசயமாக இருக்கும். ஆனால், ஒரு சில குழந்தைகள் அதற்கு அப்படியே நேர்மாறாக பெரிதாக விளையாட்டில் ஈடுபாடு காட்டாமல் மந்தமாக இருப்பர். இதற்கு அவர்களின் வாழ்வியல் முறைகள், சூழல் ஆகியவை காரணமாக இருக்கலாம். குழந்தைகள், ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு, இருந்தால் அவர்களுக்கு பல உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். இதை தீர்க்க என்ன வழி? இங்கு பார்ப்போம்.
‘ஓடி விளையாடு பாப்பா..நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா..’ என மகாகவி பாரதியாரே கூறியிருக்கிறார். குழந்தைகள், அந்த இளம் வயதில் ஓடி ஆடுவதுதான் வேலையாக கொண்டிருக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி இருக்கும் குழந்தைகள் வீட்டை விட்டு வேறு எங்குமே செல்வதில்லை. இதனால் அவர்களுக்குள் அவர்களை அறியாமலேயே சோம்பேறித்தனம் ஆட்கொண்டு விடுகிறது.
குழந்தைகள், இவ்வளவு சிறு வயதிலேயே சோம்பேறிகளாக இருப்பது பிற்காலத்தில் அவர்களை பெரிய பிரச்சனையில் கொண்டு சென்று விட்டுவிடும். குழந்தையாக இருக்கும் போது சோம்பேறித்தனத்துடன் இருப்பவர்கள், வளர்ந்த பிறகு அதையே தங்களின் பன்பாகவும் மாற்றிக்கொள்கின்றனர். இதனால் உடல் பருமன், இருதய நோய் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். இதை களைவது எப்படி? இதோ டிப்ஸ்!
குழந்தைகளிடம் இருந்து சோம்பேறித்தனத்தை களைவதற்கு சரியான வழி, விதிமுறைகளை விதிப்பதுதான். பெற்றோர்கள், குழந்தைகளிடம் கட்டாயமாக ஒரு மணி நேரம் விளையாட வேண்டும் அல்லது நடனமாட வேண்டும் என்று அன்பாக விதிமுறைகளை போட வேண்டும். பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களை குழந்தைகள் எப்போதும் செய்வதற்கு முயற்சி செய்வர்.
குழந்தைகளுக்கு, அவர்களின் நலன் குறித்த பொறுப்பினை அவர்களிடத்திலேயே கொடுத்துவிட வேண்டும். சோம்பேறி தனத்துடன் இருப்பதால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பதையும் அதனால் அவர்கள் எந்த மாதிரி கஷ்டங்களை எதிர்கொள்வர் என்றும் எடுத்துக்கூறலாம்.
பெற்றோர்கள், குழந்தைகள் ஆக்டிவாக இருக்க முயற்சி எடுக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்த, செய்வதற்கு எளிதாகவும் மகிழ்ச்சியளிக்க கூடிய வகையிலும் இருக்கும் நடவடிக்கைகளை செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகள், எப்போதும் புதிய விஷயங்கலை கற்றுக்கொள்ள முனைப்புடன் இருப்பர். எனவே, பள்ளி படிப்பு மற்றுமல்லாது, அவர்கள் விருப்பப்படும் பிற நடவடிக்கைகள் என்ன என்று தெரிந்து கொண்டு, அதனை செய்ய சொல்லி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகள், பெரியவர்களை பார்த்துதான் வளர்கின்றனர். அவர்களை போல பேசவும், நடக்கவும் கற்றுக்கொள்கின்றனர். இதை மனதில் வைத்துக்கொண்டு, பெற்றோர்களும் குழந்தைகளை போல தங்களையும் ஆக்டிவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தை போதனை செய்து பயிற்று விக்கும் போது ஏற்படும் மாற்றத்தை விட, அவர்களாகவே அதை நடைமுறையில் பார்க்கும் போது வேகமாக கற்றுக்கொள்வர்.