30 வயதுக்கு மேல் திருமணம் (Late Marriage) செய்துகொள்ளும் பழக்கம் சமீப ஆண்டுகளில் அதிகரித்துவிட்டது எனலாம். இது சமீப ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரிப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து இங்கு காணலாம்.
லேட் மேரேஜ் செய்துகொள்வது சரி, தவறு என இங்கு சொல்ல வரவில்லை. 30 வயதிற்கு மேல் திருமணம் செய்துகொள்ளும் போக்கு இப்போது அதிகரிப்பதற்கு பின்னுள்ள பல்வேறு காரணிகளையும் அலசுவதன் மூலம் இந்த காலகட்டத்தில் சில விஷயங்களை இளைஞர்களும் சரி, வயதானவர்களும் சரி புரிந்துகொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.
30 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொள்ளும் போக்கு என்பது இந்த காலகட்டத்தில் ஆண், பெண் என இருபாலரிடமும் காணப்படுகிறது.
லேட் மேரேஜ் என்றழைக்கப்படும் இந்த பழக்கத்திற்கு பின்னால் பல சமூக ரீதியான, பொருளாதார ரீதியான காரணங்களும் இருக்கின்றன, கூடவே தனிப்பட்ட சில காரணங்களும் இருக்கின்றன.
இருப்பினும், இந்த 5 காரணங்கள்தான் 30 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொள்ளும் பழக்கத்திற்கு பெரும்பாலும் வழிவகுக்கிறது எனலாம். அவற்றை இங்கு சற்று விரிவாக காணலாம்.
சமூக மாற்றம்: 23-27 வயதிற்குள் கண்டிப்பாக அனைவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. தாமதமாக திருமணம் செய்துகொள்வதால் எவ்வித தவறும் இல்லை என்ற மனநிலை அதிகரிப்பது இதற்கு முக்கிய காரணம். பெரியளவில் சமூக ரீதியாகவும் இதனை பலரும் ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டனர். எனவே, இதுவும் முக்கிய காரணம் எனலாம்.
வாழ்க்கை குறித்த பார்வை: பலருக்கும் தங்கள் வாழ்க்கை குறித்த பார்வையும், சுயம் குறித்து சிந்தனையும் 30 வயதை ஒட்டியே ஏற்படும். அதாவது, பணி சார்ந்தும், நிதி நிலைமை சார்ந்தும் ஒரு நிலையான நிலைக்கோ அல்லது தைரியமான முடிவெடுக்கும் நிலைக்கோ அப்போதுதான் வருவார்கள். எனவே, அதே காலகட்டத்தில்தான் அவர்கள் தங்கள் வாழ்வில் திருமணத்தையும் திட்டமிடுவார்கள்.
எதிர்பார்ப்புகள்: ஆண்களுக்கு பெண்கள் மீதான எதிர்பார்ப்பும், பெண்களுக்கு ஆண்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துவிட்டன. இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகாத நிலையில், திருமணம் தள்ளிப்போகின்றன. மேலும், பெண் கிடைப்பதே அரிதாகிவிட்டதாக திருமணத்திற்கு பெண் தேடும்போது ஆண் வீட்டார் கூறுவார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் பல எதிர்பார்ப்புகளை வைத்திருப்பதும் ஆகும். இதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது.
சொந்த பிரச்னை: தந்தை வாங்கிய கடன், அக்கா அல்லது தங்கை கல்விக்கு திருமணத்திற்கு வாங்கிய கடன், தங்கைக்கு முதலில் திருமணம் செய்ய வேண்டிய பொறுப்பு, சொந்தமாக வீடு கட்டுவது இப்படி பல பொறுப்புகளை ஒற்றை ஆளாக சுமக்கும் போது ஒரு பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி திருமணம் தள்ளிப்போவது இயல்பாகிவிடுகிறது. வீரம் படத்தில் அஜித் இருப்பது போல் திருமண ஆசையே இல்லாமல் இருக்கும் சிலருக்கு, 30 வயதுக்கு மேல் காதல் துளிர்விடலாம். இதுபோன்ற அவரவரின் சொந்த பிரச்னைகளும் ஒரு காரணமாகும்.
பணி சார்ந்த திட்டம்: முதல் படம் எடுத்தால்தான் திருமணம் என சென்னையில் பல இளைஞர்கள் இன்னும் சுற்றிக்கொண்டிருப்பதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். சினிமா என்றில்லை பல்வேறு பணிகளிலும் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னரே திருமணம் குறித்தெல்லாம் யோசிக்க வேண்டும் என்பது பலரின் சிந்தனையாக இருக்கிறது. இதுவும் 30 வயதுக்கு பின் நடக்கும் திருமணங்களுக்கு முக்கிய காரணம் (பொறுப்பு துறப்பு: இது ஆய்வு சார்ந்த முடிவுகளோ தகவலோ இல்லை. பொதுவான கருத்துகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை)