Thani Ram Mittal, India's Cleverest Thief : ஆயிரம் கார்களை திருடி தானி ராம் மிட்டல் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நீதிபதி ஆன அவரின் பின்னணி அதிர்ச்சியை கொடுக்கிறது.
Thani Ram Mittal, India's Cleverest Thief : இந்தியாவின் புத்திசாலி திருடன் தானி ராம் மிட்டல் தானி ராம் மிட்டல் நீதிபதி ஆனது மட்டுமல்லாமல் 2 ஆயிரம் குற்றவாளிகளையும் விடுதலை செய்திருக்கிறார். இவரின் சுவாரஸ்ய பிண்ணனியை பார்க்கலாம்.
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தான் தானி ராம் மிட்டலின் திருட்டு பயணம் தொடங்குகிறது. சட்டப்படிப்பு படித்தவரான தானி ராம் மிட்டல் கையெழுத்து நிபுணரும் கூட. சட்டப்படிப்பை முடித்த பிறகு தன்னுடைய 25வது வயதில் இருந்து திருட்டு தொழிலில் களமிறங்குகிறார். கார்களை திருடுவதுதான் இவருடைய இலக்கு. தன்னுடைய திருட்டு வாழ்க்கையில் மட்டும் சுமார் ஆயிரம் கார்களை திருடி விற்பனை செய்திருக்கிறார்.
தானி ராம் பெரும்பாலும் கார்களை பகல் நேரத்தில் மட்டுமே திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். இப்படி தொடர்ச்சியாக திருடிக் கொண்டிருக்கும்போது தான் இவருக்கு நீதிபதியாக வேண்டும் என்ற ஆசை வருகிறது. போலி ஆவணங்களை தயாரித்த அவர் ஹரியானாவின் ஜஜ்ஜார் நீதிமன்றத்திலேயே ஆள்மாறாட்டம் மூலம் நீதிபதியாகவும் செய்கிறார். உண்மையான நீதிபதியை இரண்டு மாதம் விடுப்பில் அனுப்பிய அவர், அந்த நேரத்தில் வழக்குகளை விசாரித்து 2000 கைதிகளையும் விடுதலை செய்திருக்கிறார்.
இது எப்படி சாத்தியம் என நீங்கள் நினைக்கலாம். சட்டப்படிப்பை முடித்த இளைஞரான இவர் ஜஜ்ஜார் பகுதியைச் சேர்ந்தவராகவும் இருந்தார். அங்கு நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி ஊழல் குற்றச்சாட்டில் துறை ரீதியான விசாரணைக்கு உள்ளாகியிருப்பதை செய்தித்தாள்கள் மூலம் அறிகிறார்.
இதனைத் தொடர்ந்து தானி ராம் மிட்டல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற பதிவாளர் பெயரில் ஒரு போலி கடிதத்தை, விசாரணை நீதிபதிக்கு அனுப்புகிறார். அந்த கடித்தை பார்த்த ஜஜ்ஜார் நீதிபதியும் உண்மையென நம்பிக்கொள்கிறார்.
இதன்பிறகு ஜாஜ்ஜார் நீதிமன்றத்திற்குச் தைரியமாக சென்ற தானி ராம் மிட்டல் தன்னை ஒரு நீதிபதியாக காட்டிக் கொண்டு கைதிகளின் வழக்குகளை விசாரிக்கிறார். சிறையில் கைதிகளின் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதாக கூறி சுமார் 2 ஆயிரம் குற்றவாளிகளையும் அவர் விடுவிக்கிறார்.
இந்த சம்பவம் ஹரியான மாநிலத்தில் 1980களில் நடந்திருக்கிறது. தானி ராம் மிட்டல் தன்னுடைய தந்திரமான ஏமாற்றும் திறமைகளுக்கு "சூப்பர் நட்வர்லால்" என்ற பட்டப்பெயரையும் பெற்றார்.
பலமுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாலும் அவர், தன்னுடைய ஏமாற்றும் தந்திரத்தின் மூலம் காவல்துறயிடம் இருந்து தப்பிக்கவும் செய்திருக்கிறார். மிகப்பெரிய கொள்ளைக்காரனான சார்லஸ் சோப்ராஜ் என்பவனின் பெயரைக் கொண்டு இந்தியாவின் சார்லஸ் சோப்ராஜ் என்ற புனைப்பெயரும் தானிராம் மிட்டலுக்கு கிடைத்தது.
தானி ராம் மிட்டலின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் அரங்கேற்றிய கொள்ளைச் சம்பவங்கள் எல்லாம் அதிர்ச்சியையும், வியப்பையும் கொடுக்கிறது.