pudhumai penn scheme | தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டத்தால் மாணவிகள் அடைந்த பலன் குறித்த விவரங்கள் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
pudhumai penn scheme Update | தமிழ்நாடு அரசு மாணவிகளின் உயர்கல்வி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை மாதம்தோறும் கொடுக்கப்படுகிறது.
தமிழக அரசு 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமே புதுமைப்பெண் திட்டமாகும் (Pudhumai Penn Scheme). இந்த திட்டத்தின் கீழ் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் மாணவிகள் எவ்வளவு பலனடைந்துள்ளனர் என்பது குறித்து மாநில திட்டக்குழு ஆய்வு நடத்தியது. தமிழ்நாடு முழுவதும் 2, 30, 820 மாணவிகள் இந்த திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர். அதில் பெரும்பாலானோர் சேலம், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரியில் சேரும் விகிதம் அதிகரித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மாணவிகள் ஐடி, மருத்துவத்துறை படிப்புகளில் இருப்பதுடன், பிஇ 9.7 விழுக்காடு, பிஎஸ்சி கணணி அறிவியல் 14.7 விழுக்காடு, பிகாம் 19 விழுக்காடு மாணவிகள் படிக்கின்றனர். எஸ்சி, பிசி பிரிவினர் தலா 30 விழுக்காடு, எம்பிசி 36 விழுக்காடு மாணவிகள் இந்த திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர்.
மாணவிகள் மட்டுமே பயன்பெறக்கூடிய இந்த திட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்வி உரிமை சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை கல்வி பயின்ற (RTE - Right to Education Act) பெண் குழந்தைகள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பெற இயலும்.
பெண் குழந்தைகளின் இடைநிற்றலை தடுக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிப் பெரும் பள்ளியில் கல்வி பயின்று உயர்கல்வியில் சேர்ந்திருக்கும் ஒரு குடும்பத்தினைச் சார்ந்த அனைத்து பெண்குழந்தைகளும் பயன் பெறலாம்.
உதாரணமாக ஒரு வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் உயர்கல்வி படிக்கிறார்கள் என்றால் இருவருக்கும் மாதம் தலா ஆயிரம் ரூபாய் என இரண்டாயிரம் ரூபாய் கிடைக்கும். மேலும், வேறு கல்வி உதவித் தொகை திட்டங்களிலும் பணம் பெற்றுக்கொள்ளலாம். எந்த கட்டுப்பாடும் கிடையாது. தமிழ்நாட்டை தவிர வேறு மாநிலத்தில் பள்ளிக் கல்வி முடித்திருந்தால் இந்த திட்டத்தில் சேர முடியாது.
புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் கட்டாயம் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். மதிப்பெண் உள்ளிட்ட எந்த வரம்பும் இல்லை. உயர்கல்விக்கு செல்லும் பெண் குழந்தைகளுக்கு நிச்சயம் ஆயிரம் ரூபாய் மாதம் கிடைக்கும். 10 ஆம் வகுப்பு முடித்தவர்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
இளங்கலை படிப்பு முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை கிடைக்கும். படிக்கும் கல்லூரிகளிலேயே விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த மாணவிகள் என்பதை பள்ளி அளவிலேயே "EMIS" என்ற இணையதளம் மூலம் மாணவிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதால், இதனை வைத்து யார் தகுதி வாய்ந்தவர் என்பது முடிவு செய்யப்படுகிறது.