டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவை பிளேயிங் லெவனில் சேர்க்க கூடாது என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 தொடர் பெரும் ஆரவாரத்துக்கு இடையே இறுதிக் கட்டத்தில் இருக்கும் நிலையில், அடுத்த கிரிக்கெட் திருவிழாவுக்கு ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துகின்றன.
ஜூன் 1 ஆம் தேதி அமெரிக்காவும், கனடாவும் முதல் போட்டியில் மோதுகின்றன. இந்திய அணி ஜூன் 5 ஆம் தேதி முதல் போட்டியில் ஆடுகிறது. நெதர்லாந்து அணிக்கு எதிரான இப்போட்டியில் களம் காண உள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் ரிங்குசிங், சுப்மன் கில் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. அவர்கள் ரிசர்வ் பிளேயர்களாக இந்திய அணியில் செல்ல உள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது இன்னும் மதில்மேல் பூனையாகவே இருக்கிறது. டி20 உலக கோப்பை தொடங்கிய பிறகு அவர் அணியில் இடம்பெறுவது குறித்து கேப்டன் ரோகித் சர்மா இறுதி முடிவு எடுக்க இருக்கிறார்.
அதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் தன்னுடைய டி20 உலக கோப்பை இந்திய அணியின் பிளேயிங் லெவனை அறிவித்திருக்கிறார்.
ஓபன்னிங் ரோகித், ஜெய்ஷ்வால் இறங்க வேண்டும், மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் ஆகியோரும் விக்கெட் கீப்பராக ரிஷப் பன்ட், ஆல்ரவுண்டர்களாக ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற வேண்டும் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
ஸ்பின்னராக சாஹல், வேகப்பந்துவீச்சாளர்களில் பும்ரா, அர்ஷ்தீப், சிராஜ் இருக்கலாம் என யுவராஜ் கூறியுள்ளார். சர்பிரைஸாக ரவீந்திர ஜடேஜாவுக்கு இந்திய அணியில் அவருடைய கணிப்பில் யுவராஜ் சிங் இடம் கொடுக்கவில்லை.
மேலும், சஞ்சு சாம்சனும் இடம்பெறவில்லை. ரிஷப் பன்ட் இடது கை பேட்ஸ்மேன் என்ற அடிப்படையில் சாம்சனைவிட ரிஷப் பன்டுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். யுவராஜ் சிங்கின் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் கணிப்பு இப்போது சோஷியல் மீடியாவில் பேசு பொருளாகியுள்ளது.
டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களில் சிலர் முதல் கட்டமாக மே 25 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்ல இருக்கின்றனர். எஞ்சிய வீரர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அமெரிக்கா சென்று அணியினருடன் இணைய இருக்கின்றனர்.