Happy Birthday Virat Kohli : 'விராட் எப்படி அந்த சிக்ஸரை அடித்தார்?' - வாயை பிளக்கும் ஆஸி., மூத்த வீரர்

நவீன கிரிக்கெட் யுகத்தில் விராட் கோலியின் தனித்துவம் குறித்து ஆஸ்திரேலிய மூத்த வீரர்களான மார்க் டெய்லர், இயான் சேப்பல் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 5, 2022, 07:18 AM IST
  • விராட் கோலி இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
  • தற்போதைய டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 220 ரன்களை அடித்துள்ளார்.
  • விளையாடிய 4 போட்டிகளில், 3 அரைசதம் அடித்துள்ளார்.
Happy Birthday Virat Kohli : 'விராட் எப்படி அந்த சிக்ஸரை அடித்தார்?' - வாயை பிளக்கும் ஆஸி., மூத்த வீரர் title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி தற்போது நடைபெற்று டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் அரைசதம் அடித்து மிரட்டியுள்ளார். அரைசதம் அடித்த மூன்று போட்டியிலும் அவர் ஆட்டமிழக்கவில்லை, ஒரே ஒரு முறைதான் இந்த தொடரில் ஆட்டமிழந்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 220 ரன்களுடன் தொடரில் அதிக ரன்களை குவித்தவர் அவர்தான். இந்த சூழலில், தனியார் தொலைக்காட்சியின் கிரிக்கெட் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பாவன்களும், மூத்த வீரர்களான மார்க் டெய்லரும், இயன் சேப்பலும் விராட் கோலியின் அற்புதமான ஷாட் ஒன்று குறித்து உரையாடியுள்ளனர். 

அந்த நிகழ்ச்சியில் மார்க் டெய்லர்,"மெல்போர்னில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில்,  ஹரிஸ் ரவூப் பந்துவீச்சில் விராட் பின்னங்காலில் நின்று, நேராக அடித்த அந்த சிக்ஸரைதான் இந்த உலகக்கோப்பையின் சிறந்த ஷாட் என்பேன். 90 மீட்டர் தூரத்திற்கு அந்த பந்து சென்றது. எப்படி அந்த பாலை அவர் சிக்ஸர் அடித்தார் என்பதை என்னால் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை. நான் அப்படி ஒரு ஷாட்டை அடித்திருந்தால், மிட்-ஆன் திசையில் இருந்து பீல்டர் ஓடிவந்து அந்த பாலை பிடித்திருப்பார்" என வியந்து பாராட்டினார். 

மேலும் படிக்க | T20 World cup: ஜிம்பாப்வே போட்டி மழையால் ரத்தானால் இந்தியா அரையிறுதிக்கு செல்லுமா?

தொடர்ந்து பேசிய இயான் சேப்பல்,"சில வருடங்களுக்கு முன்பு, விராட் கோலியை நேர்காணல் செய்தோம். கிரிக்கெட்டை குறித்த அற்புதமான உரையாடல் அது. அப்போது விராட் கோலியிடம், ஏன் நீங்கள் மார்டன் ஷாட்களை பயன்படுத்த மறுக்கிறீர்கள் என கேள்வியெழுப்பினேன். அதற்கு அவர், 'அது என் டெஸ்ட் அணுகுமுறையில் பாதிப்பு ஏற்படுத்தும். அதனால், அந்த ஷாட்கள் தெரிந்தாலும், அவற்றை பயன்படுத்த மாட்டேன்' என பதிலளித்தார். அது விராட் கோலியிடம் வியக்கத்தக்க ஒன்று. இவர் அடிக்கும் இத்தனை ரன்களையும் நல்ல ரன்ரேட்டில் ஆடுகிறார், அதுவும் இயல்பான கிரிக்கெட்டிங் ஷாட்கள் மூலம் எடுக்கிறார்.

சில ஷாட்களை தூக்கி அடித்து சிக்ஸரும் எடுக்கிறார், இதனால் அது ஒழுங்கின்மை ஆகாது. மார்க் டெய்லர் குறிப்பிட்டது போல், பின்னங்காலில் நின்று நேராக அடிப்பது என்பது இயல்பான ஷாட்தான், ஆனால், அதை யாரும் சிக்ஸருக்கு அடிக்க மாட்டார்கள். ஆனால், விராட் அடித்தார், அதுவும் 90 மீட்டருக்கு சென்றது" என்றார். 

இந்த டி20 உலகக்கோப்பை, மெல்போர்னில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், விராட் கோலி ஆட்டமிழக்காமல் இறுதிவரை நின்று 82 ரன்களை குவித்து, வெற்றிக்கு பெரும்பங்காற்றினார். அந்த போட்டியின் மிகவும் இக்கட்டான நிலையில், 19ஆவது ஓவரை ஹரிஸ் ரவூப் வீசினார். அதன் கடைசி இரண்டு பந்துகளில் கோலி அசத்தலாக சிக்ஸர் அடித்து ஆட்டத்தை இந்திய அணி பக்கம் கொண்டுவந்தார். 

அந்த சிக்ஸர்களில், அவரின் முதல் சிக்ஸர்தான் இந்த டி20 உலகக்கோப்பையின் சிறந்த ஷாட் இல்லை, நவீன கிரிக்கெட் யுகத்தில் மகத்தான ஷாட் என்றே கூறலாம். ஷார்ட் லென்த்தில் மெதுவாக வந்த அந்த பந்தை, பின்னங்காலில் நின்று பொளலரின் தலைக்கு மேல் நேராக சிக்ஸர் அடிப்பது என்பது மிகவும் அசாத்தியமான ஒன்று. இரண்டு வருடங்களாக அவர் ஆட்டத்தின் மீதான கேள்வியையும், பாகிஸ்தானை வீழ்த்த வேண்டிய கட்டாயத்திலும் என பெரும் நெருக்கடியான சூழலில் விராட் கோலிக்கு அந்த ஷாட் வாய்த்தது என்றே கூறலாம்.  

விராட் கோலி இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதைத்தொடர்ந்து, பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

மேலும் படிக்க | அரையிறுதி போட்டியில் இந்தியா அணி யாருடன் மோதுகிறது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News