+1, +2 மொழிப்பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தை தேர்வு செய்யலாம் என வெளியான செய்தி தவறானது!!
மேல்நிலை வகுப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம் என்று வெளிவரும் செய்திகள் உண்மையல்ல என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேல்நிலை வகுப்பு மாணவர்களின் சுமையை குறைக்கும் பொருட்டு, பொதுத்தேர்வுவின் மொத்த மதிப்பெண்களான 600-யை 500-ஆக குறைக்க பள்ளிக்கல்வித்துறை ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது.
அதாவது, மொழிப்பாடத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன.
இதையடுத்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது, " தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று வெளிவரும் செய்திகள் உண்மையல்ல. அதுமட்டுமின்றி, அதுபோன்ற ஒரு முடிவை பள்ளிக்கல்வித்துறை ஒருபோதும் எடுக்காது. எனவே மாணவர்கள் குழப்பமடைய வேண்டாம். தற்போது நடைமுறையில் இருக்கும் இருமொழிக்கொள்கையே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.