சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
சென்னையின் வர்த்தக மையமான தியாகராய நகரில் ‘சென்னை சில்க்ஸ்’ ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயில் 7 மாடி கட்டிடமும், அதில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள ஜவுளிகளும் எரிந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கட்டிடம் மொத்தம் 7 மாடிகள் கொண்டது. அனைத்தும் குளிர் சாதன வசதி கொண்டது. கடையின் மொட்டை மாடியில் கேண்டீனும், பணியாளர்கள் தங்கும் இடமும் உள்ளது. இங்கு இரவு காவல் பணியில் 10-க்கும் மேற்பட்ட காவலாளிகள் ஈடுபட்டனர்.
தீ விபத்திற்குள்ளான துணிக்கடையின் மேல்தளத்தில் தங்கியிருந்த ஊழியர்கள் 14 பேரை தீ அணைப்பு படை வீரர்கள் மீட்டுள்ளனர். 4 மணி நேரம் போராட்டத்திற்குப்பின், கிரேன் மூலம் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக ஊழியர்களை மீட்டனர்.
கடையின் 7 வது மாடி வரை பரவியுள்ள புகையை ரசாயன கலவை மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.தீயணைப்பு படையினர் கடுமையாக போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இரவு முழுவதும் கரும்புகையுடன் தீ எரிந்து கொண்டு இருந்தது. தொடர்ந்து 2-வது நாளாக தீ எரிகிறது.
இதனால் கடையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளுக்கு அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது.தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்ததால் இன்று கட்டிடத்தின் 4, 5, 6, 7-வது மாடிகள் இடிந்து விழுந்தது. அப்போது அந்த பகுதி முழுவதும் பயங்கர புகை மூட்டம் கிளம்பியது.
தொடர்ந்து தீ எரிவதால் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டால்தான் மீட்பு பணியை மேற்கொள்ள முடியும்.தீப்பிடித்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் எதிரே மேம்பாலம் உள்ளது. பாதுகாப்பு கருதி நேற்று மாலை முதல் மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்களை வேறு பாதையில் திருப்பி விட்டனர். இந்த தீ விபத்தால் அருகில் உள்ள கடைகளும் மூடப்பட்டுள்ளன.
தீவிபத்து நடந்த இடத்தில் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையாளர், தீயணைப்புத் துறை இணை இயக்குனர், தியாகராய நகர் துணை கமிஷனர் ஆகியோர் தீயணைப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள்.
அமைச்சர்கள் உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மின்கசிவு காரணமாக பிடித்து இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தீவிபத்து தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.