தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாகவும் அடுத்த இரண்டு நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி, விருதுநகர் கடலூர், விழுப்புரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதவிர காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உள்ளிட்ட பல இடங்களில் மிதமான மழை பெய்து உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை, தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை பெய்தால் சென்னையில் வழக்கத்தை விட வெப்பம் தணிந்து காணப்படுகிறது.
சென்னையில் கிண்டி, ராமாபுரம், தியாகராய நகர், வளசரவாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதேபோல் மீனம்பாக்கம், மடிப்பாக்கம், போரூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. விழுப்புரம் மாவட்டத்திலும் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.