சிவகாசியில் 24-வது நாளாக நீடித்து வரும் பட்டாசு தொழிலாளர்கள் போராட்டத்தில் ரயில்மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு வெடிக்க இந்தியா முழுவதும் தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனால் விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் 24வது நாளாக இன்றும் தொடருகிறது.
சுற்று சூழல் பாதுகாப்பு விதியில் இருந்து முற்றிலும் விலக்க அளிக்க கோரியும், பட்டாசு தொழிலையும், பட்டாசு தொழிலாளர்களையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் 4 லட்சத்துக்கு அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வருவாய் இல்லாமல் அவதிப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அன்றாட செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் சிரமப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு பட்டாசு தொழிலை காப்பாற்ற வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.
இந்த நிலையில், சிவகாசி அருகே திருத்தங்கலில் பட்டாசு தொழிலாளர்கள் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்து உள்ளனர்.