பாஜக தலைவர் மனோகர் லால் கட்டார் மற்றும் ஜன்னாயக் ஜந்தா கட்சி (JJP) தலைவர் துஷ்யந்த் சௌதலா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஹரியானாவின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்றனர்.
பதவியேற்பு விழாவில் அகாலிதளத் தலைவர் பிரகாஷ் சிங் பாடல், அவரது மகன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் சுக்பீர் பாடல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் காங்கிரசின் பூபிந்தர் ஹூடாவும் கலந்து கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கிறது.
முன்னதாக நேற்றைய தினம்., JJP தலைவர் துஷ்யந்த், கட்டருடன் சேர்ந்து ஆளுநர் சத்யடியோ நரேன் ஆர்யாவை சந்தித்தபோது அரசாங்கத்தை அமைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தர். பாஜக தன் வசம் 40 MLA-க்களை கொண்டுள்ளது, JJP தன் வசம் 10 MLA, 7 சுயேட்சை MLA-க்களுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இருகட்சி தலைவர்களின் கோரிக்கையினை ஏற்று, ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து., பாஜக தலைவர் மனோகர் லால் கட்டர் மற்றும் ஜன்னாயக் ஜந்தா கட்சி (JJP) தலைவர் துஷ்யந்த் சௌதலா ஆகியோர் முறையே ஹரியானாவில் முதலமைச்சராகவும், துணை முதல்வராகவும் இன்று மதியம் 2.15 மணியளவில் ராஜ் பவனில் பதவியேற்றுக்கொண்டனர்.
நடந்து முடிந்த தேர்தலில் 40 உறுப்பினர்களை வென்ற பாஜக, 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு ஆறு குறைவாக இருந்த நிலையில், முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் பேரன் துஷ்யந்த் சௌதாலா தலைமையிலான JJP-யுடன் வெள்ளிக்கிழமை மாலை ஒரு கூட்டணியை அறிவித்தது. இந்த கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின்னர் இன்று பாஜக தலைவர் மனோகர் லால் கட்டார் இரண்டாம் முறையாக மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
முன்னதாக., பிரதமர் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி, அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட ஒரு விழாவில், கட்டர் முதல் முறையாக முதல்வர் பதவியேற்றார். குறித்த இந்நிகழ்வு அக்டோபர் 26, 2014 அன்று நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.