பழுப்பு அரிசி எனப்படும் கைக்குத்தல் அரிசியானது வெகு குறைவான தோல் நீக்கப்பட்டது. இவ்வகை அரிசி வெகுவாக தீட்டப்படாததால், மிகுந்த சத்துள்ளதாக இருக்கும்.
பழுப்பு அரிசியில் சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் மிகுதியாக உள்ளது.
பழுப்பு அரிசி நன்மைகள் என்னவென்று பார்ப்போம்:-
* நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், பழுப்பு அரிசிச்சோறு, இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இரத்தக் குழலில் பிளேக் உருவாகும் அபாயத்தையும் குறைக்கும். இதனால் இதய நோய் வருவதை குறைக்க முடியும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
* இந்த அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்களை இரைப்பை குடல் பகுதிகளில் தங்கவிடாமல் பாதுகாக்க உதவும்.
* பழுப்பு அரிசியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உணவின் கலோரி அளவை கட்டுப்படுத்தி, அதிக உணவை உட்கொள்வதை தடுக்கிறது. இந்த உணவை சாப்பிட்ட பெண்களின் உடல் எடை குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
* இந்த அரிசியின் உயர் நார்ச்சத்தினால், இது உணவை செரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. இதனால் மலச்சிக்கலை தடுத்து, ஆரோக்கியமான குடல் இயக்கங்களை பெறலாம்.
* பழுப்பு அரிசியில் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க தேவையான மெக்னீசியம் உள்ளது. ஒரு கிண்ணம் பழுப்பு அரிசிச் சோற்றில் ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்படும் மெக்னீசியம் அளவில் 21% இருக்கிறது. மேலும், மெக்னீசியத்தால், எலும்புகள் கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்தினை உறிஞ்சுகிறது.